Last Updated : 28 Nov, 2013 12:00 AM

 

Published : 28 Nov 2013 12:00 AM
Last Updated : 28 Nov 2013 12:00 AM

ஷெனாய் நகர் கலையரங்கம் டிசம்பரில் தயார்

சென்னை மாநகராட்சி சார்பில், ஷெனாய் நகரில் அமைக்கப்பட்டு வரும், நவீன கலையரங்கத்தின் இறுதிக் கட்டப்பணி டிசம்பரில் நிறைவடையும் என தெரிய வந்துள்ளது.

அண்ணாநகர் மண்டலம், ஷெனாய் நகர் 8-வது குறுக்குத் தெருவில், சென்னை மாநகராட்சி சார்பில் கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம், இலக்கிய நிகழ்ச்சி உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் நவீன கலையரங்கம் அமைக்கும் பணி கடந்த 2009-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்டது. பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தற்போது தயாராகிவிடும் என மாநகராட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அண்ணாநகர், ஷெனாய் நகரில் 3 ஏக்கர் பரப்பளவில் , ரூ. 15 கோடி செலவில், 61 ஆயிரத்து 756 சதுர அடியில் நவீன கலையரங்கம் அமைக்கும் பணி, கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடந்து வந்தாலும், 2010- ம் ஆண்டு முதல்தான் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 4 லிப்ட்கள், குளிர்சாதன வசதி கொண்ட இந்த கலையரங்கு 3 தளங்கள் கொண்டது. இதில், தரை தளம் மற்றும் கலையரங்கைச் சுற்றி 375 கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தலாம்.

முதல் தளம், 900 இருக்கைகளுடன் கூடிய கலையரங்காகவும், இரண்டாம் தளம் கண்காட்சிகள் நடத்தக் கூடிய இடமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கலையரங்குகளில் மிகப் பெரிய கலையரங்கமான இந்த ஷெனாய் நகர் கலையரங்கின் முன் பகுதி மற்றும் இரு புறம் பசுமையை பறைசாற்றும் வகையில் மரங்கள், செடிகள் கொண்ட பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒளி, ஒலி வசதிகளுடன் கூடிய இந்த கலையரங்கிற்காக, கலையரங்க வளாகப் பகுதியில் துணை மின் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.

கலையரங்கம் அமைக்கும் பணியில் 95 சதவீதம் முடிந்து விட்டது. முகப்பு அலங்காரம் மற்றும் இருக்கை அமைக்கும் பணி என, 5 சதவீதப் பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகிறது. அப்பணிகள் வரும் டிசம்பர் மாத இறுதியில் நிறைவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x