Published : 07 Mar 2017 12:26 PM
Last Updated : 07 Mar 2017 12:26 PM

இலங்கை துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி

இலங்கை துப்பாக்கிச் சூட்டில் பலியான ராமேஸ்வரத்தின் தங்கச்சிமடம் மீனவர் ப்ரிட்ஜோ குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி தளத்திலிருந்து 6.3.2017 அன்று இராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த மீனவர்கள் விசைப் படகில் பாக் வளைகுடாவில் அவர்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இரவு சுமார் 9.30 மணி அளவில் மேற்கண்ட மீன்பிடி விசைப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அப்பாவி மீனவர்களை நோக்கி அங்குவந்த இலங்கை கடற்படையினர் எவ்வித அறிவிப்பும் இன்றி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இத்துப்பாக்கிச் சூட்டில், அப்படகிலிருந்த ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ, த/பெ கெமிலஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இச்சம்பவத்தில் காயமடைந்த சரோண் என்பவர் இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு தொடர்ந்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு நான் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை பிடித்தும், அச்சுறுத்தியும், படகுகளைக் கைப்பற்றுவதும், தொடர் நடவடிக்கையாக இருந்து வருவதை தமிழக அரசு அவ்வப்போது மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி, நிரந்தர தீர்வு காண வற்புறுத்தி வந்துள்ளது.

தற்போது நடத்திய இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இத்துப்பாக்கிச் சூட்டில் அகால மரணமடைந்த பிரிட்ஜோ குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்துயரச் சம்பவத்தில் காலமான பிரிட்ஜோவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்த சரோண் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x