Published : 03 Dec 2013 12:00 AM
Last Updated : 03 Dec 2013 12:00 AM

சீட் பெல்ட் அணிவது தொந்தரவா?

காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வரும் 8-ம் தேதி முதல் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார், கடந்த 2 வாரமாக வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். துண்டு பிரசுரங்களையும் வினியோகிக்கின்றனர். மேலும், நகரின் பல பகுதிகளிலும் இதுகுறித்த விளம்பர பலகைகளை வைத்துள்ளனர்.

போலீசாரின் இந்த திடீர் நடவடிக்கையை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில், வெறும் கண்துடைப்பாக இல்லாமல் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது குறித்து கார் டிரைவர்கள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

கால் டாக்ஸி டிரைவர் ரோஷின் (26), ஆழ்வார்ப்பேட்டை: சீட் பெல்ட் போட்டு காரை ஓட்டுவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. ஆனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சீட் பெல்ட் போட்டுதான் காரை ஓட்ட வேண்டும் என்று சொல்வார்கள். மற்றவர்கள் யாரும் அப்படி கட்டாயப்படுத்துவது இல்லை.

கருத்து

டிரைவர் பாண்டியராஜன் (29), திருவல்லிக்கேணி: வெளிநாட்டினர் சவாரி வந்தால், சீட் பெல்ட் போடுமாறு கட்டாயப்படுத்துவார்கள். மற்றபடி, சீட் பெல்ட் போடுவதில்லை. இது கட்டாயம் என்று சட்டம் வந்தால், கண்டிப்பாக போடுவேன்.

விபின் (22), அண்ணாநகர்: எப்போதும் சீட் பெல்ட் போட்டுக் கொண்டுதான் கார் ஓட்டுகிறேன். இப்படிச் செய்வதால், விபத்துகளில் உயிரிழப்புகள் தடுக்கப்படும். கார் ஓட்டும்போது, அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் போட வேண்டும்.

டிரைவர் மணிகண்டன் (29), பெருங்களத்தூர்: ஐடி கம்பெனியில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறேன். காரில் வரும் பணியாளர்கள், சீட் பெல்ட் போட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். அதனால், போட்டுக் கொள்வேன். பக்கத்தில் எங்கேயாவது போவதென்றால் சீட் பெல்ட் போட மாட்டேன்.

முகேஷ் (53), கொட்டிவாக்கம்: ஆரம்பத்தில் சீட் பெல்ட் போட்டு கார் ஓட்டியபோது ஒரு

மாதிரியாக இருந்தது. நம்மை கட்டிப்போட்டது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. இப்போது பழகிவிட்டது. காரில் ஏறி ஸ்டார்ட் செய்தவுடன் முதலில் சீட் பெல்ட்டைதான் போடுவேன்.

ராஜா (33), ராயபுரம்: சீட் பெல்ட் போட்டு காரை ஓட்டுவது சிரமமாக உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். காரில் வேகமாகவும் செல்ல முடியாது. அப்படி இருக்கும்போது எதற்கு சீட் பெல்ட் போட வேண்டும்? பெல்ட் போட்டுக்கொண்டால் அவசரத்துக்கு அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திரும்ப முடியவில்லை. கழுத்துப் பகுதி இறுக்கமாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும்போது, சீட் பெல்ட் போடுவது பயனுள்ளதாக இருக்கும்.

இரண்டாவது விபத்து

சீட் பெல்ட் போடுவதன் அவசியம் குறித்து கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி நரம்பியல் துறை நிபுணரும் பேராசிரியருமான பாலசுப்பிரமணியன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

வேகமாகச் சென்று கொண்டிருக்கும் கார், இன்னொரு கார் மீதோ அல்லது மரத்தின் மீதோ மோதுவது முதல் விபத்து. மோதியவுடன் காரில் இருக்கும் டிரைவர் ஸ்டியரிங் மீது மோதுவது இரண்டாவது விபத்து. இந்த இரண்டாம் விபத்தில்தான் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஸ்டியரிங் மீது தலை மோதும்போது நெற்றி, தலை போன்ற பகுதிகளில் காயம் ஏற்படும். மேலும் நுரையீரல் நசுங்குதல், விலா எலும்புகள் நொறுங்குதல், முழங்கால்கள் உடைதல் போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும். இந்த இரண்டாவது விபத்தைத் தடுப்பதிலும், அதன் பாதிப்புகளைக் குறைப்பதிலும் சீட் பெல்ட் முக்கியப் பங்காற்றுகிறது.

விலையுயர்ந்த கார்களில் இருக்கும் ஷாக் அப்சர்வர், ஏர் பேக், குஷன் பாதுகாப்பு போலத்தான் சீட் பெல்ட் தரும் பாதுகாப்பும். சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்குவது முற்றிலும் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x