Published : 13 Mar 2014 01:45 PM
Last Updated : 13 Mar 2014 01:45 PM

களத்தில் நிற்கும் கரூர் மாப்பிள்ளையும் மண்ணின் மைந்தரும்: எதிரெதிராக மோதும் நண்பர்கள்

கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.பி-யும் கரூர் மாப்பிள்ளையுமான தம்பிதுரையும், திமுக சார்பில் முன்னாள் எம்.பி-யும் மண்ணின் மைந்தருமான சின்னசாமியும் நேரடியாகப் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட்பாளரான தம்பி துரைக்கும் திமுக வேட்பாளரான சின்னசாமிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே 1972-ல் அதிமுக உறுப்பினரானவர்கள். அதிமுக-வில் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என பல பொறுப்பு களுக்கு வந்தவர்கள். இடையில் 2010-ல் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டதால் சின்னசாமி திமுக-வில் இணைந்தார்

ஒரே வயதுடைய இருவருமே கொங்கு வேளாளக் கவுண்டர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தம்பிதுரை எம்.ஏ., பி.ஹெச்டி படித்து, விரிவுரையாளராக இருந்தவர். சின்னசாமி பி.எஸ்ஸி. பி.எல் படித்த வழக்கறிஞர். சின்னசாமி 1980, 1991, 1996 அதிமுக சார்பிலும் 1989-ல் ஜெ அணி சார்பிலும் கரூர் சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட்டு 1980, 1991 தேர்தல்களில் மட்டும் வெற்றி பெற்றார். அதிமுக-வில் மாவட்டச் செயலாளர், மாநில துணைப் பொதுச் செயலாளர் பதவிகளை வகித்த சின்னசாமி 1991-ல் தொழில் துறை அமைச்சராக இருந்தார். 1999-ல் கரூர் எம்.பி. ஆனார்.

இதேபோல், தம்பிதுரை 1984-ல் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் வென்றவர். அதன்பிறகு, கரூர் தொகுதியில் 4 முறை போட்டியிட்டு 3 முறை ஜெயித்தவர். 5-வது முறையாகக் களமிறங்குகிறார். 2001-ல் பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று கல்வி அமைச்சராகவும் இருந்தார். தம்பிதுரை கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் 2 முறை திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியோடு மோதி வென்றவர். சின்னசாமியும் 1999-ல் கே.சி.பழனிச்சாமியை வீழ்த்தித்தான் எம்.பி. ஆனார்.

தம்பிதுரை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கரூரில் பெண் எடுத்ததால் அவரை செல்லமாக கரூர் மாப்பிள்ளை என அழைப்பார்கள். சின்னசாமி மண்ணின் மைந்தர். கரூர் மாவட்டம் உருவாகக் காரணமானவர். ஒரே பாசறையில் தங்களது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இந்த இருவரும் முதல்முறையாக ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x