Published : 18 Feb 2017 11:28 AM
Last Updated : 18 Feb 2017 11:28 AM

முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் திடீர் டெல்லி பயணம்: மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு

புதுச்சேரி முதல்வர் நாராயணாசாமி தலைமையில் அமைச்சர்கள் ஐந்து பேரும் நேற்று திடீர் டெல்லி பயணம் சென்றுள்ளனர். துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக அவர்கள் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய சரக்கு மற்றும் சேவைவரி தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்று புதுச்சேரியின் தேவைகளைப்பற்றி எடுத்துக்கூறி வலியுறுத்துவதற்காக முதல்வர் நாராயணசாமி நேற்று டெல்லி சென்றுள்ளார். அவர் நேற்று காலை டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை சந்தித்து பேசினார்.

அப்போது கோரிமேட்டில் உள்ள அன்னை தெரசா சுகாதார அறிவியல் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். மேலும் புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேல்நிலை படிப்புகளான எம்டி மற்றும் எம்.எஸ். படிப்புகளில் கூடுதல் இடங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதைத்தொடர்ந்து நேற்று மாலை, மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜேட்லியை முதல்வருடன் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலகண்ணன் ஆகியோரும் சந்தித்தனர். புதுச்சேரி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி தரவும், நலத்திட்டங்களுக்கு போதிய நிதி தரவும் கோரிக்கை வைத்தனர். விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கை சந்தித்து புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் பார்வையிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என கோரினர்.

இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "வழக்கமான டெல்லி பயணம் இது. நிதி, பல்வேறு திட்டங்கள் செயல்பாடு தொடர்பாக சந்திக்க வந்துள்ளோம்" என்று குறிப்பிடுகிறார்.

முதல்வருடன், புதுச்சேரி அமைச்சர்கள் ஐவரும் டெல்லியில் முகாமிட்டுள்ளது தொடர்பாக அரசு வட்டாரங்கள் மற்றும் காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, "டெல்லிக்கு பலமுறை முதல்வர் சென்று வந்தாலும் நிதியை மத்திய அரசு தரவில்லை. அத்துடன் ஆளுநர் கிரண்பேடி விவகாரம் பெரிதாகியுள்ளது. அமைச்சரவை அனுப்பும் திட்டம் தொடர்பான கோப்புகளுக்கு அவர் ஒப்புதல் தருவதில்லை. உயர் அதிகாரிகள் மாறுதல், நிதி தொடர்பான கோப்புகள் திருப்பியனுப்புதல், மீன்பிடி துறைமுகம் தூர்வாரும் பணி தலையீட்டால் பணிகள் பாதிப்பு, முதியோர், விதவைகள் மாத ஓய்வூதியம் தரும் கோப்புக்கு அனுமதியளிப்பதில் காலதாமதம், தியாகிகள் ஓய்வூதிய உயர்வு கோப்பினை திருப்பியனுப்பியது. இலவச அரிசியை ரேஷனில் வழங்கும் திட்ட நிதி அனுமதி உட்பட பலவற்றில் ஆளுநரால் அரசு திட்டங்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்க உள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.

குறிப்பாக குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், அதைத்தொடர்ந்து புகார் பற்றிய விவரம் வெளிப்படையாக தெரியவரும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x