Published : 06 Feb 2014 09:40 AM
Last Updated : 06 Feb 2014 09:40 AM

ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஓராண்டு பட்டம் செல்லாது- உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு ஓராண்டு காலத்தில் பெற்ற பட்டம் செல்லாது என்று தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஒரு பாடத்தில் மூன்று ஆண்டுகள் படித்து பட்டம் பெறுபவர்கள், பணி வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு போன்ற காரணங்களுக்காக இன்னொரு பாடத்தில் பட்டம் பெறுகின்றனர். அத்தகைய கூடுதல் பட்டங்களுக்காக பலர் ஓராண்டு மட்டுமே படித்துள்ளனர்.

இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும்போது மூன்றாண்டு கால பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், ஓராண்டு காலத்தில் கூடுதலாகப் பெற்ற பட்டத்தின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்றும் பிரச்சினை எழுந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஓராண்டு காலத்தில் பெறும் பட்டம் செல்லாது என்று கடந்த 2012-ம் ஆண்டில் தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஏராளமானோர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டு மனுக்கள் மீது தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன், ‘‘ஓராண்டு படிப்பு என்பது மிகவும் குறுகிய காலம் ஆகும். இந்த குறுகிய காலப் படிப்பில் மாணவர்களுக்கு நன்கு பாடம் நடத்துவதற்கு ஏற்ற அறிவாற்றலையோ, அனுபவத்தையோ பெற இயலாது. ஆகவே, ஓராண்டு கால பட்டத்தை பதவி உயர்வுக்கு ஏற்பது இல்லை என்ற அரசின் முடிவு சரியானதே’’ என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஓராண்டில் பெறுகின்ற பட்டம் பதவி உயர்வுக்கோ, பணி நியமனத்துக்கோ செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு சரியே என்று கூறி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

‘‘அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மற்றும் விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அத்தகைய மாணவர்களும் தங்கள் வாழ்வில் முன்னேறி, இந்த நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும். எனவே, கல்வியின் தரம் பராமரிக்கப்பட வேண்டும்.

இத்தகைய சூழலில் எல்லாவித அம்சங்களையும் ஆராய்ந்து சரியான தீர்ப்பையே தனி நீதிபதி அளித்துள்ளார். இதுதவிர, ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்க தகுதியவற்றவர்கள் என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முடிவும் சரியானதே. ஆகவே, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’’ என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x