Published : 17 Jul 2016 06:51 PM
Last Updated : 17 Jul 2016 06:51 PM

மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க கல்விக் கடனை ரத்து செய்க: ஜி.ராமகிருஷ்ணன்

லெனின் தற்கொலைக்கு காரணமான வங்கி மீதும், மிரட்டிய நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை, எளிய மாணவர்கள் வாங்கியுள்ள கல்விக் கடனை ரத்து செய்திட வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ''பொறியியல் படிப்பிற்கு லெனின் (வயது 23) என்ற மாணவர் வாங்கிய கல்விக் கடனை திருப்பிச் செலுத்துமாறு கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதுடன், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர் லெனினை இழந்து தவிக்கும் அவரது பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

பாரத ஸ்டேட் வங்கி மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடனில் 45 சதவிகிதத்தை வசூலிக்க ரிலையன்ஸ் தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கிய போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன் இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டுமென வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் லெனின் பொறியியல் படிப்பை முடித்தாலும் சில பாடங்களில் தேர்ச்சி பெறாததாலும் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வேலை கிடைக்காத காரணத்தினால் அவரால் வாங்கிய வங்கி கடனை அடைக்க முடியவில்லை.

ஆனால், வங்கி நிர்வாகம் நியமித்த ரிலையன்ஸ் தனியார் ஏஜென்சி நிறுவனம் கடனை வசூலிக்க மாணவர் லெனினையும், அவரது குடும்பத்தினரையும் தொடர்ந்து மிரட்டியும், அச்சுறுத்தியும் நெருக்கடி கொடுத்துள்ளதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவர் லெனினை இத்தகைய நிலைக்கு ஆளாக்கிய வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் வசூல் ஏஜென்சியின் இந்த மனியநேயமற்ற நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

மாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கி நியமித்துள்ள தனியார் ஏஜென்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

மேலும், லெனின் தற்கொலைக்கு காரணமான வங்கி மீதும், மிரட்டிய நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்; இறந்த மாணவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும்.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்தது. எனவே ஏழை, எளிய மாணவர்கள் வாங்கியுள்ள கல்விக் கடனை உடனடியாக முழுமையாக ரத்து செய்திட வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x