Last Updated : 15 Feb, 2017 08:29 AM

 

Published : 15 Feb 2017 08:29 AM
Last Updated : 15 Feb 2017 08:29 AM

கிளைச் செயலாளர் முதல் முதல்வர் தேர்வு வரை: எடப்பாடி பழனிச்சாமி கடந்து வந்த பாதை

அதிமுகவில் கிளைச் செயலாளராக அரசியலில் அடியெடுத்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வானது வரை அவர் அரசியலில் கடந்து வந்த பாதை:

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த நெடுங்குளம் கிராமத்தில் சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்ப கவுண்டர், தவசாயம்மாள் தம்பதியின் இளைய மகன் எடப்பாடி பழனிச்சாமி(63).

ஈரோடு ஸ்ரீவாசவி கல்லூரியில் 1976-ம் ஆண்டு பிஎஸ்சி (தேர்ச்சி பெறவில்லை) படித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கு மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா உள்ளனர். தொடக்கத்தில் விவசாயம், வெல்லம் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தார். அதிமுக முன்னாள் அமைச்சரான ஈரோடு முத்துசாமி இவரது பக்கத்து தோட்டக்காரர்.

அதிமுகவில் உறுப்பினராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி 1986-ல் நெடுங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஜானகி, ஜெயலலிதா அணிகள் பிரிந்தபோது, முத்துசாமி ஜானகி அணிக்கும், செங்கோட்டையன் ஜெயலலிதா அணிக்கும் சென்றனர். அப்போது, செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஜெயலலிதா அணியில் இணைந்து 1989-ம் ஆண்டு சேவல் சின்னத்தில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வானார்.

பிளவுபட்டிருந்த அதிமுக ஒன்றிணைந்த பின்னர் 1991-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானார். 1992-1996 வரை ஆவின் தலைவராக இருந்தார். பின்னர் 1996-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். 1998-ல் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். 1999 மற்றும் 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். அப்போது சிமென்ட் வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

2006-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி யடைந்தார். அதிமுகவில் செங்கோட்டையனின் செல்வாக்கு குறைந்ததைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2016-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் அமைச்சரானார். அமைச்சர்கள் தங்கமணி மற்றும் கருப்பண்ணன் ஆகியோர் இவரது உறவினர்கள்.

கட்சியில் கடந்து வந்த பாதை: 1972-ல் சிலுவம்பாளையம் பகுதி கிளைச் செயலாளர். 1983-ல் அதிமுக ஒன்றிய இணைச் செயலாளர். 1990-ம் ஆண்டு சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர். 2011-ல் சேலம் மேற்கு மாவட்டச் செயலா ளர். 2011-ல் சேலம் புறநகர் மாவட் டச் செயலாளர். 2015-ம் ஆண்டு கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர். 2017-அதிமுக தலைமை நிலையச் செயலாளர். நேற்று முதல் அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர்.

ரூ.9.69 கோடி சொத்து

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ரூ.9 கோடியே 69 லட்சத்து 66 ஆயிரத்து 584 என தாக்கல் செய்துள்ளார். வங்கி உள்ளிட்டவைகளில் கடன் ஏதுமில்லை என்றும் குடும்பத்தினர் எவரது பெயரிலும் சொந்தமாக வாகனம் ஏதுமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x