Last Updated : 30 Mar, 2014 11:08 AM

 

Published : 30 Mar 2014 11:08 AM
Last Updated : 30 Mar 2014 11:08 AM

தென் மாவட்ட ரயில்களில் நடுவழியிலே தண்ணீர் தீர்ந்து விடுவதால் பயணிகள் அவதி

சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களிலும், அங்கிருந்து சென்னைக்கு வரும் ரயில்களிலும் நடுவழியிலேயே தண்ணீர் தீர்ந்துவிடுவதால், கழிப்பறைக்குக் கூட போக முடியாமல் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் பலதடவை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தஞ்சாவூர், மன்னார்குடி, திருச்சி, ராமேஸ்வரம், செங்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுபோல மறுமார்க்கத்தில் அந்த ஊர்களில் இருந்து சென்னைக்கும் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தமிழகம் போதிய மழையின்மையால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது, ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயில்களிலும் எதிரொலிக்கிறது.

தென் மாவட்டங்களில் ஓடும் பெரும்பாலான ரயில்களில் நடுவழியிலேயே தண்ணீர் தீர்ந்துவிடுகிறது. இந்த ரயில்கள் அனைத்தும் மாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணிக்குள் புறப்பட்டு மறுநாள் காலையில் அந்தந்த ஊர்களுக்கு போய்ச் சேருகின்றன. ஊருக்கு போய்ச் சேரும்முன் அனைத்து பயணிகளும் காலைக்கடன்களை முடித்தாக வேண்டும். அதற்கு தண்ணீர் இல்லாமல் பயணிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினரும், சாத்தூர் தொழில் வர்த்தக சபையின் பொதுச் செயலாளருமான பி.டி.கே.ஏ.பாலசுப்பிரமணியன் கூறிய தாவது:

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களிலும் செங்கல்பட்டு செல்லும்போதே ரயில் பெட்டிகளில் தண்ணீர் தீர்ந்துவிடுகிறது. அதனால் கழிப்பறைக்குக் கூட செல்ல முடியாமல் அவதிப்படும் நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. மறுமார்க்கத்திலும் இதேநிலைதான்.

இப்பிரச்சினை குறித்து மதுரை கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் ஆலோ சனைக் கூட்டத்தில் பலமுறை எடுத்துரைத்துள்ளேன். பொது மக்களும் ஏராளமான புகார்கள் கொடுத்துள்ளனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாத்தூர் ரயில் நிலையத்தின் தண்ணீர் தேவைக்காக வைப்பாறு ஆற்றங்கரையோரத்தில் ரயில்வே நிலத்தில் கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இப்போது இந்தக் கிணறு வற்றிவிட்டதால், லாரியில் விலைக்கு தண்ணீர் வாங்கி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை நிரப்புகின்றனர். அந்த தண்ணீர் பயணிகள் தேவைக்குப் போதுமானதாக இல்லை. ஏராளமான ரயில் நிலையங்களின் நிலைமையும் இதுதான் என்றார்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களுக்கு தண்ணீர் நிரப்புவதற்காக சென்னைக் குடிநீர் வாரியத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக மாதந்தோறும் ரூ.2.5 கோடி வரை செலவாகிறது. சென்னையில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் போதிய அளவு சப்ளை கிடைப்பதில்லை. ஓரிரு மாதங்களுக்கு முன்பு தண்ணீர் சப்ளை மிக மோசமாக இருந்தது. தற்போது தண்ணீர் சப்ளை ஓரளவுக்கு சீரடைந்துள்ளது. எனவே ரயில்களில் போதிய அளவு தண்ணீர் நிரப்பப்பட்டுவருகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x