Published : 29 Jun 2017 10:24 AM
Last Updated : 29 Jun 2017 10:24 AM

நீலகிரி மாவட்ட பழங்குடியினர் மொழி அகராதி வெளியீடு

நீலகிரி மாவட்ட பழங்குடியினரின் மொழி அகராதி வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, படங்களுடனான அகராதி தயாரிக்கும் முயற்சியில் நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் ஈடுபட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கத்தின் (நாவா) கீழ் இயங்கும் விக்டோரியா ஆம்ஸ்டிராங் பள்ளி முதல்வர் பூவிழி தலைமையில் ஆசிரியைகள் ஏ.காயத்ரி மற்றும் பி.தேன்மலர் ஆகியோர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர், கோத்தர், இருளர், குறும்பர், பனியர், முள்ளு மற்றும் பெட்டு குறும்பர் ஆகிய பழங்குடியினரின் மொழிச் சொற்களைக் கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழில் அகராதி தயாரித்துள்ளனர்.

முதற்கட்டமாக பொதுச் சொற்கள், செயல்கள், உறவுகள், காய்கள், கனிகள், மலர்கள் மற்றும் விலங்குகள் என 300 சொற்களை ஒவ்வொரு மொழியிலிருந்தும் மொழிபெயர்த்துள்ளனர்.

இந்த அகராதி, கையேடாக திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘மொழி’ என பெயரிட்ட இந்த அகராதி நேற்று வெளியிப்பட்டது.

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்த விழாவில், அகராதியை சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் அமர் குசாவா வெளியிட, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். விழாவில், நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க செயலாளர் எம்.ஆல்வாஸ், இயக்குநர் விஜயகுமார், பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் சுப்ரமணியன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜகோபால், தோடர் பழங்குடியினர் தலைவர் மந்தேஸ் குட்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அகராதி தயாரித்த ஆசிரியை பூவிழி கூறும்போது, ‘‘இந்த முயற்சி மேலும் தொடரும். அடுத்த கட்டமாக படங்களுடனான அகராதி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். நீலகிரி மாவட்டத்தில் பல தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. அவற்றின் புகைப்படங்களை சேகரித்து அகராதி தயாரிக்கும்போது, வரும் சந்ததியினருக்கு அந்த தாவரங்கள் மற்றும் விலங்குகள் குறித்து அறிய வாய்ப்பு ஏற்படும்’’ என்றார்.

கையேடு தயாரிக்க உதவிய திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கத் தலைவர் முத்துசாமி கூறும்போது, ‘‘உலகில் 1400 மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. இதனால், அவை வேகமாக அழிந்து வருகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினரின் மொழிகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதால், அந்த மொழிகள் பாதுகாக்கப்படுவதோடு, பிறர் அந்த மொழிகளை அறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எங்கள் சங்கம் உதவியுள்ளது பெருமையாக உள்ளது,’’ என்றார்.

‘தி இந்து’-வுக்கு சிறப்பு

ஆசிரியைகள் மொழி அகராதி தயாரித்து வருவது குறித்து ‘தி இந்து’-வில் கடந்த ஆண்டு செப்டம்பரில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது அகராதி கையேடாக அச்சிடப்பட்டுள்ளது. இந்த கையேட்டில் ‘தி இந்து’ செய்தியை பிரதி எடுத்து அச்சிட்டு, ‘நாவா’ சிறப்பு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x