Published : 25 Mar 2017 08:21 AM
Last Updated : 25 Mar 2017 08:21 AM

பாளையங்கோட்டை நகைக்கடையில் கொள்ளைபோன 60 கிலோ நகை காட்பாடி வாகன சோதனையில் மீட்பு: காரில் வந்த கொள்ளையர்கள் வனப் பகுதிக்குள் தப்பி ஓட்டம்

பாளையங்கோட்டை, முருகன் குறிச்சியில் உள்ள ‘அழகர் ஜுவல்லர்ஸ்’ நகைக் கடையில் கொள்ளைபோன 60 கிலோ தங்க, வைர நகைகள், நேற்று மாலை வேலூர் மாவட்டம் காட்பாடி சோதனைச் சாவடியில் நடந்த வாகன தணிக்கையின்போது சிக்கின. காரில் நகைகளை கடத்திவந்தவர்கள் போலீஸாரை கண்டதும் காரிலிருந்து இறங்கி தப்பினர்.

தூத்துக்குடியை தலைமை யிடமாகக் கொண்டு பாளையங் கோட்டை, கோவில்பட்டி, நாகர் கோவில் ஆகிய இடங்களில் ‘அழகர் ஜுவல்லர்ஸ் கிளைகள் செயல்படுகின்றன. பாளையங் கோட்டை மகாராஜ நகரைச் சேர்ந்த தாமோதரன் என்ற பாபு(50), இக்கடைகளை நடத்தி வருகிறார்.

ரூ.20 கோடி நகை

பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில், 3 மாடி கட்டிடத்தில் நகைக் கடை அமைந்துள்ளது. இரவில் கடையை பூட்டுவதற்கு முன், தங்கம் மற்றும் வைர நகைகளை லாக்கரில் வைத்து பூட்டிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவும் நகைகளை லாக்கரில் வைத்துவிட்டு சென்றனர். நேற்று காலை கடையை ஊழியர்கள் திறந்தபோது, கீழ்தளம் மற்றும் மேல்தளத்தில் லாக்கர்கள் உடைக்கப்பட்டு இருந்தன. சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள, 60 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் பிரதீப்குமார், கூடுதல் துணை ஆணையர் இளங்கோ, பாளையங்கோட்டை ஆய்வாளர் ஜெயமுருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் ‘புளூட்டோ’ வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள், கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளையர்கள் விட்டுச்சென்ற 2 சிறிய காஸ் சிலிண்டர்கள், 2 வெல்டிங் இயந்திரம், கட்டிங் பிளேடு உள்ளிட்ட பொருட்களை போலீஸார் கைப்பற்றினர்.

கடையின் 3-வது தளத்தில் உள்ள இரும்பு கதவை, வெல்டிங் இயந்திரம் மூலம் துளையிட்டு, கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள் ளனர். கடையின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கொள்ளை யர்கள் கடைக்குள் புகுந்ததும், கேமரா மற்றும் அலாரம் இணைப்புகளை துண்டித்துள்ளனர்.

ஆனால், கேமரா இணைப்பை துண்டிக்கும் முன் பதிவான உருவங்கள் கிடைத்துள்ளன. அந்த வீடியோ பதிவில் கொள்ளையர்கள், வடமாநிலத்தவர்போல் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

கொள்ளை நடைபெற்ற நகைக்கடையின் அருகே புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக சாரம் கட்டப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் அந்த வழியாக ஏறி கடைக்குள் சென்றுள்ளனர்.

காட்பாடியில் நகைகள் பறிமுதல்

இதனிடையே நேற்று மாலை வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டையில் நடந்த போலீஸ் வாகன சோதனையின் போது ஒரு காரை போலீஸார் நிறுத்தி னர். அப்போது அந்த காரில் இருந்த 5 பேர் இறங்கி அருகே உள்ள வனப்பகுதிக்குள் ஓடிவிட்டனர். பின்னர் போலீஸார் காரை சோதனை யிட்டபோது அதில் 7 பைகளில் நகை கள், வைர நகைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த நகைகள் பாளையங்கோட் டையில் உள்ள நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதிக்குள் தப்பியவர்களை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x