Published : 20 Sep 2016 08:40 AM
Last Updated : 20 Sep 2016 08:40 AM

சுற்றுலா கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் மாமல்லபுரத்தில் பழைய நுழைவுச் சீட்டுகள் விநியோகம்: தொல்லியல் துறை விளக்கம்

மாமல்லபுரம் கடற்கரை கோயிலைக் காண்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்தி 5 மாதங்கள் கடந்துவிட்டது. இந்நிலையில், தற்போதும் பழைய கட்டணச் சீட்டையே பயன்படுத்தி, அதில் புதிய தொகையை சீலிட்டு வழங்குவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில், கடற்கரை கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்க்க 1996-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.10-ஆகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.250-ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்த கட்டணங்கள் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட்டன. அதன்படி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.30-ம், வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.500-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.30-க்கு உரிய கட்டணச் சீட்டு வழங்கப்படாமல் ரூ.10 கட்டணம் உள்ள பழைய சீட்டில் ஒரு சீல் மட்டும் பதிவிடப்பட்டு வழங்கப்படுகிறது. கட்டணம் உயர்த்தப்பட்டு 6 மாதங்க ளாகும் நிலையில், இது போல் பழைய கட்டணச் சீட்டுகளே வழங்கப்பட்டு வருவது சரியான நடைமுறை இல்லை என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிகாரிகளுக்கு மனு

இதுகுறித்து சுற்றுலாப் பயணியான அவளூர் ஜி.சீனிவாசன் கூறும்போது, ‘கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு புதிய நுழைவுச் சீட்டு வழங்காமல் பழைய நுழைவுச் சீட்டில் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் திருத்தி வழங்குகின்றனர். 5 மாதங்களுக்கும் மேலாக இந்நிலை நீடிப்பது சரியல்ல.

உடனடியாக திருத்தப்பட்ட புதிய நுழைவுச் சீட்டுகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். கடந்த 5 மாதங்களாக திருத்தம் செய்யப்பட்டு வழங்கப்பட்ட பழைய நுழைவுச் சீட்டுகள் குறித்து தணிக்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை தொல்லியில் துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்ப உள்ளேன்’ என்று கூறினார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் தொல்லியல் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, ‘புதிய நுழைவுச் சீட்டுகள் இன்னும் எங்களுக்கு வரவில்லை. கட்டணத்தை உயர்த்தி உத்தரவு மட்டும் வந்துள்ளது. அதனால்தான் பழைய நுழைவுச் சீட்டில் கட்டணத்தை திருத்தி வழங்குகிறோம். விரைவில் இ-டிக்கெட் நடைமுறை வர உள்ளதால் புதிய நுழைவுச் சீட்டுகள் வருவதில் தாமதம் ஆகிறது’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x