Published : 06 Mar 2017 06:44 PM
Last Updated : 06 Mar 2017 06:44 PM

மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பு ஜெயலலிதா தாக்கப்படவில்லை: தமிழக அரசு

மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பு ஜெயலலிதா தாக்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 22-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எய்ம்ஸ் மருத்துவர்களின் முழு அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு

இது தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''செப்.22-ல் மூச்சுத்திணறல் காரணமாக மயக்க நிலையில் ஜெயலலிதா இருந்தார். மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆம்புலன்ஸ் மூலம் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை சாப்பிட்டார். நீர்ச்சத்து குறைவு, நீரிழிவு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் ஜெயலலிதா.

சிகிச்சை குறித்த அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கும், ஜெயலலிதா தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பு ஜெயலலிதா தாக்கப்படவில்லை. ஜெயலலிதா தாக்கப்பட்டதாகவோ, துன்புறுத்தப்பட்டதாகவோ எந்த தடயமும் இல்லை

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட சிகிச்சைகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குறை சொல்லவில்லை. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைக்கு நல்ல முன்னேற்றம் இருந்தது. அப்போலோ மருத்துவர்களின் சிகிச்சையை எய்ம்ஸ் மருத்துவர்கள் பாராட்டினர்.

அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதா அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்தார். காவிரி பிரச்சினை, குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் மருத்துவமனையில் இருந்தபடி ஜெயலலிதா விவாதித்தார்.

டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் தரப்பட்டது. இதயம் செயல்படவில்லை என உறுதிப்படுத்திய பிறகு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தம்பிதுரை, விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகள் படியும், மருத்துவ நீதிப்படியும் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பான விவரங்களை வெளியிடக் கூடாது. ஆனால், தற்போதைய சூழலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தற்போது எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை மற்றும் அப்போலோ மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் சம்மரியையும் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x