Published : 12 Feb 2014 07:55 PM
Last Updated : 12 Feb 2014 07:55 PM

தலைவரை நியமிக்கத் தயங்கும் காங்கிரஸ்: கன்னியாகுமரியில் போராடத் தயாராகும் தொண்டர்கள்

எதிர் எதிர் துருவங்களாக செயல்படும் பா.ஜ.கவினரும், காங்கிரஸ் கட்சியினரும் கூட கன்னியாகுமரி மாவட்டத்தில் கைகோர்த்து நடப்பர். ஆனால், காங்கிரஸார் இருவர் சேர்ந்திருப்பது, ஆச்சர்யமான விஷயம். மாற்றுக் கட்சியினர் `ரூம்’ போட்டு சிரிக்கும் அளவுக்கு கோஷ்டிப் பூசல்கள் பெருத்து போய் இருக்கிறது, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில்.

தலைவர் வருவாரா?

அதன் உச்சக்கட்ட வெளிப்பாடு, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் பட்டியலை அறிவித்த காங்கிரஸ் தலைமை, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மட்டும், தலைவர் பட்டியலை அறிவிக்கவில்லை. காரணம் இங்கு இருக்கும் அனைவருமே தலைவர் கனவில் இருப்பதுதான். புதிதாக ஒரு தலைவரை காங்கிரஸ் கட்சி அறிவித்தால் எதிர் அணியினர் வேலை செய்யாமல் ஒதுங்குவதோடு, புதிய தலைவரை வேலை செய்ய விடாமலும் துரத்துவர் என்பதுதான் குமரி முனை நிலவரம்.

காங்கிரஸின் மூத்த உறுப்பினரான புத்தேரி கிராமத்தை சேர்ந்த தவசிமுத்து, சமீபத்தில் ஒரு போராட்டத்தை அறிவித்தார். காங்கிரஸ் தலைமை குமரி மாவட்டத்துக்கு உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை.

ஆனால், காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் போராட்டம் ரத்தானது. காங்கிரஸ் கட்சி தலைவரை நியமிப்பதற்கே தள்ளாடும் அளவுக்கு இருப்பது அக்கட்சியின் மிகப்பெரிய பலவீனம்.

இரு அலுவலகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி கிழக்கு, மேற்கு என இரு மாவட்டமாக செயல்படுகிறது. கிழக்கு மாவட்டத் தலைவராக குளச்சல் எம்.எல்.ஏ, ஜெயபால் இருந்து வந்தார். இவர் புற்றுநோயால் இறந்து விட, அப்போதைய காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் சிக்னலுடன், ராபர்ட் புரூஸ் கிழக்கு மாவட்டத் தலைவரானார். இப்போதும் நாகர்கோவில் நகரில் இரண்டு காங்கிரஸ் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

ராபர்ட் புரூஸை கிழக்கு மாவட்டத் தலைவராக ஏற்றுக் கொண்ட ஒரு அலுவலகம் டெரிக் சந்தில் செயல்பட்டு வருகிறது. அதன் எதிரே உள்ள இன்னொரு சந்தில் முன்னாள் நாகர்கோவில் நகர்மன்ற தலைவர் அசோக் சாலமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து தனியே ஒரு காங்கிரஸ் அலுவலகம் நடத்தி வருகின்றனர்.

`காங்கிரஸ் ஆபீஸில் இருந்து பேசுறோம்’ என அழைப்பு வரும் போது, பாவம் பத்திரிகையாளர்கள் தான் தலையைப் பிய்த்துக் கொள்வர். மேற்கு மாவட்டத் தலைவராக குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் இருக்கிறார். மாவட்டத்தலைவர் பதவிக்காலமும் முடிந்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புதிய நிர்வாகிகளை நியமித்த பின்னும், குமரி மாவட்டத்துக்கு மட்டும் நியமிக்கப்படவில்லை.

வாசன் கோஷ்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், கிள்ளியூர், விளவங் கோடு என மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றனர். இதில், குளச்சல் எம்.எல்.ஏ., பிரின்ஸ், கிள்ளியூர் எம்.எல்.ஏ., ஜான் ஜேக்கப் ஆகியோர் ஓரணியாக செயல்படுகின்றனர். இவர்கள் வாசன் ஆதரவாளர்கள்.

தனி ஆவர்த்தனம்

விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதரணி தனி ஆவர்த்தனம் செய்கிறார். டெல்லியில் இவருக்கு செல்வாக்கு அதிகம். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த விஜயதரணி, நளினி சிதம்பரத்திடம் ஜூனியராக இருந்தவர். மணி சங்கர் ஜயருடன் நல்ல நட்பில் இருக்கும் இவர், ராகுல் ஆதரவாளர்.

கிழக்கு மாவட்டத் தலைவராக இப்போது இருந்து வரும் ராபர்ட் புரூஸ் தங்கபாலு நிழலில் ஒதுங்கி நிற்கிறார். முன்னாள் நகராட்சி சேர்மன் அசோக் சாலமன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தீவிர ஆதரவாளர். காங்கிரஸ் மூத்த உறுப்பினரும் வாசன் ஆதரவாளருமான ஜேம்ஸ், ராஜாக்கமங்கலம் கிழக்கு வட்டாரத் தலைவர் தனபால், குருந்தன்கோடு யூனியன் சேர்மன் கே.டி.உதயம், அகஸ்தீஸ்வரம் முன்னாள் வட்டாரத் தலைவர் தேரிவிளை தாணுலிங்க நாடார் , கவுன்சிலர் செல்வம், விவசாயப் பிரிவு தலைவர் ஆர்.எஸ்.ராஜன், நகரத் தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கிழக்கு மாவட்ட தலைவர் கனவில் வலம் வருகிறார்கள்.

மேற்கு மாவட்டத் தலைவராகும் கனவிலும் பலர் இருக்கின்றனர். முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஸ் குமார், ரமேஷ் குமார் உள்ளிட்ட பலரும் களத்தில் இருக்கிறார்கள். மொத்தத்தில் குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் தலைவரை நியமிப்பது என்பது காங்கிரஸ் தலைமைக்கு தலைவலியை உருவாக்கும் என்பதாலேயே, தலைமை மவுனம் சாதிக்கிறது என்கிறார்கள் காங்கிரஸின் பல்ஸ் அறிந்தவர்கள்.

தலைவர் பதவி நியமனம் குறித்து போராடத் தயாராகி வரும் தவசிமுத்துவிடம் கேட்ட போது, `கோஷ்டியை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வருகிறது. விரைவில் தலைவரை நியமிப்பது மட்டுமே கட்சிக்கு கவுரவம். தலைவரே இல்லாமல் எப்படி தேர்தல் வேலை பார்ப்பது? விரைவில் நியமிக்கா விட்டால் சத்யமூர்த்தி பவனுக்கே சென்று போராட்டம் நடத்துவேன்’ என்கிறார்.

தலைவரை நியமிக்கவே போராடும் காங்கிரஸ் கட்சியை என்னவென்று சொல்லுவது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x