Last Updated : 10 Jan, 2017 12:11 PM

 

Published : 10 Jan 2017 12:11 PM
Last Updated : 10 Jan 2017 12:11 PM

நொய்யல் இன்று 25: இளைய மகளைக் காணாது கோபம் கொள்ளும் காவிரிக்கு என்னதான் பரிகாரம்?

பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்...

ஆற்றை உருவாக்கும் நீரோடை பள்ளங்கள், ஆற்றுப்படுகைகள், குளங்கள், குட்டைகள் எல்லாம் நாசமாகி விட்டன என்பதை வலியுறுத்துவதால் என்ன பயன்? இதற்கு தீர்வு என்ன?

“10 ஆண்டுகளாக தண்ணீரே வராத வெள்ளலூர் குளத்தை மீட்கும் போராட்டங்களிலும் பங்கு பெறுகிறோம். வாய்க்காலில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சிக்கிறோம். இப்படி ஒவ்வொரு அமைப்பும் புறப்பட்டால் நொய்யலை மீட்கலாமே?” என்கிறார் கரங்கள் அமைப்பு நிர்வாகி மணிகண்டன்.

‘நொய்யல் மீட்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம். வெள்ளலூரில் சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாக இயங்கிய சாயப்பட்டறைகளைக் கண்டறிந்து, ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுத்தோம். இப்படி அத்தனை பேரும் கைதட்டினால் நொய்யலுக்கு ஓசை கிடைக்கும்தானே?” எனக் கேட்டார் கொங்குநாடு ஜனநாயக கட்சித் தலைவர் நாகராஜ்.

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வி.சுப்பிரமணியம் “நான் வட்டாட்சியராக இருந்தபோது வாய்க்காலை சீரமைத்து, வெள்ளலூர் குளத்துக்கு நீர்கொண்டு வந்தோம். கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஏன் இதைச் செய்யவில்லை? வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் என்ன சிக்கல்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

கோவையிலிருந்து கரூர் வரை 1,000-க்கம் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள், விவசாய சங்கங்கள், நேர்மையான அரசு ஊழியர்கள், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் நொய்யல் மீட்க களமிறங்கினர். ஆனால், அதைவிட பல மடங்கு மக்கள், நதியைப் பாழாக்க தீவிரம் காட்டுகிறார்கள். நதி மீட்புக்கா களமிறங்கிய அமைப்புகளும்கூட விதிவிலக்கில்லை. இவர்களுக்கு சில அதிகாரிகளும் துணை என்பது வேதனைக்குரியது.

ரூ.700 கோடியில் திட்டம்

“நொய்யல் நீர்ப்பாசன அமைப்புகள் சீரமைப்புக்கு ரூ.350 கோடி, நீர்நிலைகளில் உள்ள கழிவுநீரை சுத்தப்படுத்தி, சூழல் பணிகள் மேற்கொள்ள ரூ.340 கோடி, இதர செலவுகளுக்கு ரூ.10 கோடி என ரூ.700 கோடியில் நொய்யல் புனரமைப்பு பணிகளுக்காக திட்டவரைவு தயாரித்து, அரசுக்கு அனுப்பி உள்ளோம்” என்று பொதுப்பணித் துறையினர் என்று கடந்த 2 ஆண்டுகளாக கூறுகின்றனர்.

வெள்ளியங்கிரி மலை முதல் செம்மாண்டம்பாளையம் வரையிலான நொய்யல் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று ஆட்சியர் த.ந.ஹரிஹரன் அறிவித்துள்ளார்.

மேலும், கெளசிகா நதி எனப்படும் வண்ணத்தாங்கரை நீரோடையில் 50 கிலோமீட்டர் தொலைவுக்கு தடுப்பணைகள், குளம், குட்டை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.87 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய அரசின் ரூ.500 கோடி நிதியுதவியுடன் 8 குளங்களை மையப்படுத்தி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை அறிவித்துள்ளது கோவை மாநகராட்சி. சாக்கடைக் கழிவுநீரை சுத்திகரிக்க ஏற்கெனவே 3 சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தும் உள்ளது. ஆனால், மாநகரின் சாக்கடைக் கழிவுநீர் முழுவதும், குளங்கள், நீரோடைகள், ஆற்றின் வழித்தடங்களில்தான் கலக்கப்படுகிறது. நீர்நிலைகளைப் பொறுத்தவரை மாநகராட்சி அதிகாரிகளின் அறிவுப்புகளும், செயல்பாடுகளும் முரண்பாடாக உள்ளன என்றே பலரும் தெரிவிக்கின்றனர்.

நீர்நிலைகளைக் காப்பதில் விவசாயிகளின் பங்களிப்பு என்ன? நொய்யலின் கடைகோடி விவசாயி, அதில் வரும் ரசாயனக் கழிவுகளைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார். ஆனால், நொய்யலின் முகப்பில் உள்ள விவசாயிகள் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. தங்களது நிலங்களுக்கு மட்டுமே நீரைப் பயன்படுத்துகிறார்கள். நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் விற்றுள்ளார்கள்.

அவை, நீரோடைக்களுக்கு உள்ளேயே ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்கின்றன. விவசாய நிலங்களுக்கான வண்டிப்பாதையை அடைத்துவிடுகின்றனர். வலசை மறிக்கப்பட்டதால் ஊருக்குள் நுழைந்து, பயிர்களை சேதப்படுத்துகின்றன காட்டு யானைகள். நிலத்தை விற்க விரும்பாத சில விவசாயிகளே வேதனைக்குரல் எழுப்புகின்றனர்.

இதனால்தான் தனி அமைப்புகள் மூலம் நதி மீட்பு சாத்தியமா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். பேரூர் பட்டீஸ்வரர் கோயில் சோழன்படித்துறையின் ஆடிப் பெருக்கன்று 18 படிகளை வெள்ளம் தொட்டுச் செல்லும். அப்போது புது வெள்ளத்தை பூக்கள் தூவி வரவேற்பதும், பொங்கல் படையலிடுவதும் வேளாண் குடிகளின் வழக்கம். இந்த மரபைக் கைவிடாமல், பேரூர் தமிழ்க் கல்லூரி மாணவ, மாணவிகள் இப்போதும் ஆடிப் பெருக்கன்று இந்த நிகழ்வை நிகழ்த்துகின்றனர். ஆனால், ஆற்றில் வெள்ளம்தான் வருவதில்லை.

“நொய்யல் வெள்ளம் கலந்த பின்புதான், காவிரித் தாய் அமைதியுறுவாள். இல்லையென்றால், இன்னும் ஏன் இளையமகள் வரவில்லை?” என்று கோபம் கொள்வாளாம். அதற்காக, கரூர் மாவட்டம் நொய்யல் கிராமம் அருகேயுள்ள கொடுமணல் தங்கம்மன் கோயிலில் ஆடிப் பெருக்கன்று பொங்கல் வைத்து வழிபடுவதை இன்றும் பழக்கமாக வைத்திருக்கிறார்கள் அப்பகுதியினர். தொல்லியல் சிறப்புமிக்க இந்த ஊர், தற்போது சாயக்கழிவால் காய்ந்துபோய் காணப்படுகிறது.

சாணப் பிள்ளையார்

இப்போது தைப்பொங்கல். இதற்கும், நொய்யலுக்கும், கோவை மக்களுக்கும் உள்ள நெருக்கம் என்ன? 50 ஆண்டுகளுக்கு முன், கிராமங்களில் மார்கழி பிறந்து விட்டால், அதிகாலையில் ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் கோலமிட்டு, அதன் நடுவில் மாட்டுச்சாண உருண்டையிலான பிள்ளையார் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதன்மீது, பூசணிப்பூ, அரசாணிப்பூ, செம்பருத்திப்பூ என ஏதாவது ஒன்று வைக்கப்பட்டிருக்கும். சூரியன் உச்சிக்கு வரும்போது அந்த சாணப் பிள்ளையாரை கூரை மீது வீசிவிடுவர்.

அடுத்த நாள் கோலம் பெரிதாகி, 3 சாணப் பிள்ளையார் வைக்கப்படுவார். அதற்கடுத்த நாள் 5 பிள்ளையார் உட்காருவார். மார்கழி மாத கடைசி நாள் 59 பிள்ளையார்கள் வைப்பார்கள். அந்த அளவுக்கு கோலமும் பெரிதாகிவிடும். இவ்வாறு மாதம் முழுக்க வைக்கப்பட்டு, கூரையில் வீசப்பட்ட சுமார் 900 சாணப் பிள்ளையார்களை கூடையில் அடுக்கிவைப்பர்.

காணும் பொங்கலன்று தனியே பொங்கல்வைத்து, சாணப் பிள்ளையாருக்கு படையலிடுவர். பிறகு, புள்ளையார்களை கன்னிப் பெண்கள் ஊர்வலமாகக் கொண்டுசென்று, ஊர்க்கோடியில் கூடுவார்கள். அங்கே கும்மி கொட்டி, “ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ” என்று பாட்டுப்பாடி, நடனமாடுவர்.

பின்னர், சாணப் புள்ளையாரை ஊர்வலமாக ஆற்றுக்கு கொண்டுசென்று, ஒவ்வொன்றாக ஆற்றில் விடுவர். அப்போது, “வாயக்கட்டி வயித்தைக் கட்டி வளத்தினனே புள்ளையாரே, இப்படி ஆத்தோட போறியேடி புள்ளையாரே” என்று வேடிக்கையாய் ஒப்பாரி பாடுவார்கள். தொடர்ந்து, கையோடு கொண்டுசென்ற கரும்பு, பொங்கல், சீடை, முறுக்கு, அதிரசம், பொரி, கடலை ஆகியவற்றை, உறவுகளுடன் உண்டு களித்து, ஊர் திரும்புவர்.

இப்படி, மார்கழி மாதத்தில் குளித்து, ஈரத் தாவணி அல்லது சேலையுடன் கன்னிப் பெண்கள் தினமும் வீட்டின் வாயிலில் கோலமிட்டு, சாணப் பிள்ளையார் பிடித்துவைத்து, ஊர்க்கோடி பிள்ளையாருக்கு குடத்தில் தண்ணீர் ஊற்றி வழிபட்டால், அடுத்த ஆண்டே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இதற்கு ‘பூப்பறிக்கிற நோம்பி’ என்ற பெயரும் உண்டு.

தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி, நரசீபுரம், சாடிவயல், ஆலாந்துறை என நொய்யலின் கடைகோடி வரையிலான ஊர்களில் இந்தக் கொண்டாட்டத்துக்கு குறைவிருக்காது. ஆற்றங்கரையோரம் மட்டுமின்றி, வாய்க்கால் ஏரி, குளக் கரைகளிலும் இந்த விழா களைகட்டும்.

சாணப் பிள்ளையார் வைத்துக் கொண்டாடிய மக்களால் நொய்யல் நதிக்கு துளியும் கேடு நேரவில்லை. அதுமட்டுமல்ல,

ஆற்றில் விடப்பட்ட காய்ந்த சாண உருண்டைகளால் வண்டலில் உரம் நிறைந்து, பசுமை விளைந்தது. ஆனால், நொய்யலின் தோற்றுவாயான சாடிவயல் சாடியாற்றில் கடந்த 4 மாதங்களுக்கு முன் விசர்ஜனம் செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பிள்ளையார் சிலைகள் கரையாமல் கிடக்கின்றன. அவற்றை அகற்ற முடியாமல் விவசாயிகள் இன்றும் தத்தளிக்கிறார்கள்.

அங்கு மட்டுமல்ல, பேரூர், சுண்டக்காமுத்தூர், முத்தண்ணன் குளங்களிலும் நிறைந்துள்ளன பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் பிள்ளையார் சிலைகள். குளங்கள் வறண்டாலும், பூஞ்சாணம் படிந்து, துர்நாற்றத்துடன் கிடக்கின்றன.

வசீகரமானது மேற்கத்திய கலாச்சாரம். அதில், அரசியலும், வர்த்தகமும் கலந்துள்ளது. வடக்கத்திய கலாச்சாரத்திலும்கூட பிரம்மாண்டம் உள்ளது. அதில், அரசியலும், அதிகாரப் பதவிகளும் கலந்துள்ளன. ஆனால், கோவை மண்ணின் கலாச்சாரம், பண்பாட்டுக் கூறுகள் உறவுகளை நேசிக்கின்றன. இதன் விழாக்கள் உறவை நெருக்கமாக்குகின்றன. அதுவே, இயற்கையை நேசிக்க வைத்து, சூழலை வலிமைப்படுத்துகிறது.

நதி ஓடும் பாதையில் ஓரமாய் நின்று மனிதன் நீரை அள்ளிப் பருகலாம். அதை இம்சித்தால்? நீரிலான உலகு தனக்குத்தானே தகவமைக்கும். தன் வழியில் குறுக்கிடுபவர்களை தன்னுள் இழுத்துக் கொண்டு, தன்னை இயல்பானதாக மாற்றிக்கொள்ளும். பிறகு, ஏதுமறியா அப்பாவிபோல தன் திசை நோக்கிப் பயணிக்கும். அதில் புத்தம் புது ஜீவன்கள் ஜனிக்கும். மனிதர்கள்தான் தங்களை நதியிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

தொடர் முற்றியது; நதி பயணிக்கிறது...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x