Published : 02 Oct 2014 10:05 AM
Last Updated : 02 Oct 2014 10:05 AM

எல்ஐசி சமுதாய பாதுகாப்பு திட்டத்தில் 5 லட்சம் புதிய ‘குழு காப்பீடு’ சேர்க்க முடிவு

சமுதாயப் பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படும் நிலையில், சுமார் 5 லட்சம் குழுக் காப்பீடு சேர்க்க இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா சாலை எல்.ஐ.சி. கட்டட வளாகத்தில் நேற்று சமுதாயப் பாதுகாப்பு விழா நடந்தது. இதில் சென்னை கோட்ட முதுநிலை மேலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்புரையாற்றினார்.

ஓய்வூதியம் மற்றும் குழுக் காப்பீடு திட்டங்களின் மண்டல மேலாளர் ஆர்.துரைசாமி பேசும்போது, “கடந்த 1980களிலேயே சமுதாய காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, இந்தத் திட்டத்தின் மூலம் குழுக் காப்பீடுகள் வழங்கப்பட்டன” என்றார்.

ஆயுள் காப்பீடுக் கழக, வணிகத் துறை தென் மண்டல மேலாளர் எம்.ரவிச்சந்திரன் பேசும்போது, “பல கோடிக்கு காப்பீடுகள் தரும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நலிந்தோருக்கு காப்பீடு வழங்கும் புரட்சி மாதமாக அக்டோபரை கொண்டாடுகிறோம். ஒவ்வொரு பொருளுக்கும் விலை இருக்கிறது. அதுபோல் மனிதனுக்கு மதிப்பிட்டு, அவர்களது குடும்பத்துக்கான பாதுகாப்பை ஆயுள் காப்பீடு மூலம் தருகிறோம். மற்ற காப்பீடு எண்ணிக்கையை விட சமுதாயப் பாதுகாப்பு காப்பீடு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” என்று கூறினார்.

ஆயுள் காப்பீடு தென் மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் பேசுகையில், “தனி நபர் காப்பீடு மூலம் ஆண்டுக்கு ரூ.3,650 கோடி இலக்கும், குழுக் காப்பீடுக்கு ரூ.3,300 கோடி இலக்கும் நிர்ணயித்து செயல்பட்டாலும், இதை விட அதிகமாக நலிந்தோருக்கான குழுக் காப்பீடு சேர்ப்பதிலும், வழங்குவதிலும் தான் நிம்மதி ஏற்படுகிறது.

எனவே ஆம் ஆத்மி பீமா யோஜனா குழுக் காப்பீடுத் திட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 4 லட்சம் காப்பீடுகள் சேர்த்துள்ளோம். இன்னும் 5 லட்சம் காப்பீடு சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x