Published : 18 Jun 2016 02:26 PM
Last Updated : 18 Jun 2016 02:26 PM

முல்லை பெரியாறு விவகாரத்தில் தேவையற்ற அரசியல்: உம்மன் சாண்டிக்கு ராமதாஸ் கண்டனம்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தை முன்வைத்து தேவையற்ற, மலிவான அரசியல் செய்வது உம்மன் சாண்டி போன்ற மூத்த தலைவர்களுக்கு அழகல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக - கேரள எல்லையில் வண்டிப் பெரியாறு என்ற இடத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் உண்ணாநிலை போராட்டம் நடத்தியுள்ளன. இரு மாநில ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலான காங்கிரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது ஆகும்.

முல்லை பெரியாறு அணை சிக்கல் என்பது முடிந்து போன ஒன்றாகும். 37 ஆண்டுகளுக்கு முன்பு வரை முல்லை பெரியாற்று அணையின் நீர்மட்டம் 152 அடியாகவே இருந்து வந்தது. 1979 ஆம் ஆண்டில் கேரளத்தின் தவறான புகாரை நம்பி அப்போதிருந்த அதிமுக அரசு முல்லை பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்க ஒப்புக்கொண்டது. அப்போது பறிக்கப்பட்ட தமிழகத்தின் உரிமை 27 ஆண்டு சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 2006-ஆம் ஆண்டில் மீட்கப்பட்டது. ஆனால், அப்போதிருந்த அதிமுக அரசு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி உரிமையை நிலைநாட்ட தவறிவிட்டது.

அதனால் மேலும் 8 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி 2014 -ஆம் ஆண்டில் தான் இறுதி வெற்றியைப் பெற முடிந்தது. முல்லைப் பெரியாறு வழக்கில் 07.05.2014 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அணை நீர்மட்டத்தை உடனடியாக 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்ட பின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் ஆணையிட்டது. அதன்படி நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டுவிட்ட நிலையில், அடுத்தகட்டமாக 152 அடியாக உயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முல்லை பெரியாறு அணை மிக வலிமையாக இருப்பதாக அதை ஆய்வு செய்த வல்லுநர் குழு அளித்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு தான் உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது. முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் உறுதியாக கூறிவிட்டனர். ஆனால், அந்த தீர்ப்பை மதிக்காமல் முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட தமிழகம் ஒத்துழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது உச்ச நீதிமன்ற அவமதிப்பு மட்டுமின்றி, தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும்.

அதிலும், குறிப்பாக கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டி, இந்த போராட்டத்திற்கு தலைமை ஏற்றிருப்பது பொறுப்பற்ற செயல் ஆகும். இப்போராட்டத்தின் போது உம்மன் சாண்டி தெரிவித்த கருத்துக்கள் ஏற்க முடியாதவையாகும்.

முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்பட்டாலும் தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் விடப்படும். அதை உறுதி செய்த பிறகு தான் இப்போதுள்ள முல்லை பெரியாறு அணை இடிக்கப்படும் என்று உம்மன் சாண்டி கூறுவது ஏமாற்று வேலை ஆகும்.

இப்போதுள்ள முல்லை பெரியாற்று அணையே தேனி மாவட்ட படுகை மட்டத்திற்கு கீழ் இருப்பதால் அந்த அணையின் நீர்மட்டம் 105 அடிக்கு மேல் உயர்ந்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். முல்லை பெரியாற்றில் புதிய அணை இப்போது உள்ள அணை மட்டத்திலிருந்து 500 அடிக்கும் கீழ் கட்டப்பட்டால் குறைந்தபட்சம் 605 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கப்பட்டால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். இது முழுக்க முழுக்க சாத்தியமற்ற ஒன்றாகும். தமிழக மக்களை ஏமாற்றும் நோக்குடன் தான் இந்த வாதத்தை சாண்டி முன்வைக்கிறார்.

முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது சட்டப்படி சாத்தியமில்லை; இவ்விஷயத்தில் தமிழக அரசின் ஒப்புதலின்றி எதையும் சாதிக்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார். அவரது இந்த முதிர்ச்சியான கருத்தை மதித்து இரு மாநில உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைக்காமல் முல்லை பெரியாறு அணை விவகாரத்தை முன்வைத்து தேவையற்ற, மலிவான அரசியல் செய்வதும் உம்மன் சாண்டி போன்ற மூத்த தலைவர்களுக்கு அழகல்ல.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதால் கேரள மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள உல்லாச விடுதிகள் தான் நீரில் மூழ்கும். இதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உல்லாச விடுதி உரிமையாளர்களின் குரலாகத் தான் உம்மன் சாண்டி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றனர். இது நல்லதல்ல.

பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கேரள அரசும், அம்மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x