Published : 05 Feb 2014 06:19 PM
Last Updated : 05 Feb 2014 06:19 PM

கோவை: பாகன்களின் நீங்காத நினைவுகள்

கோயில் மற்றும் வனத்துறை யானைகள் நலவாழ்வு புத்துணர்ச்சி முகாம் நேற்று மாலையுடன் முடிவு பெற்றது. பசுமை நிறைந்த நினைவுகள் மாறா தன்மையுடன் விழாக்கோலம் பூண்டு யானைகளை வழியனுப்பி மகிழ்ந்தனர் ஊர்மக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றங்கரையின் இருபகுதிகளில் முறையே அமைந்திருக்கும் தேக்கம்பட்டி, விளாமரத்தூர் ஆகிய கிராமங்களில் கோயில் யானைகள் மற்றும் வனத்துறை யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம்கள் தொடங்கியது. 48 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வு தினம்தினம் திருவிழாபோலவே இங்குள்ள மக்களை உற்சாகக் கடலில் ஆழ்த்தியது.

நிறைவு விழா நிகழ்ச்சிகள் நேற்று பிற்பகல் 5 மணிக்கு துவங்கியது. அதற்கு முன்னதாக பாகன்கள் ஒன்று கூடி புகைப்படங்கள் எடுத்து, ஆரத்தழுவிக்கொண்டனர். இதுகுறித்து யானைப்பாகன்கள் சிலர் கூறியது:

ஒரு கோயில் யானைக்கு ஒரே ஒரு பாகன், ஒரு துணைப்பாகன், ஒரு உதவியாளர் ஆகிய மூவர் மட்டுமே இருப்போம். கோயிலில் யானைகளிடம் வரும் பக்தர்கள் காணிக்கை கொடுப்பார்கள். அந்த பணத்தில் அதற்கான விசேஷ உணவுகள் வாங்கித்தருவோம்.

இந்த நல வாழ்வு முகாம் எங்கள் துன்ப துயரங்களை பகிர்ந்து கொள்ள ஏதுவாக அமைந்தது. கடந்த ஆண்டு யானைப்பாகன்கள் நலவாழ்வு சங்கம் என்ற அமைப்பை நாங்கள் இங்கே முகாம் நடந்த வேளையில்தான் உருவாக்கினோம்.

அதற்கு பிறகு எங்கள் பிரச்சனைகளை தொலைபேசி வாயிலாகவே பேசிக்கொள்ள முடிந்தது.

அதற்குப் பிறகு ஓர் ஆண்டு கழித்துத்தான் இங்கே சந்தித்தோம். இதனால், மனதில் இனம்புரியாத நிறைவு ஏற்படுகிறது. இந்த முகாமில், இரவில் செஸ் விளையாட்டு, கேரம் விளையாட்டு, யானைகளுடன் சேர்ந்து விளையாடுவது என ஒரே குடும்பமாக செயல்பட முடிந்தது. இந்த ஆண்டு காட்டுயானைகள் தொல்லை மிகுதியாக இருந்தது. நாங்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டதால்தான் 11 முறைக்கு மேல் வந்த காட்டுயானைகளை முகாமிற்குள் விடாமல் விரட்ட முடிந்தது. இரண்டு முறை காட்டுயானைகள் உள்ளே வந்துவிட்டது. கோயில் யானைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க முடிந்தது என்றனர்.

வனத்துறை யானை முகாம் பாகன்கள்

வனத்துறை யானை முகாம் பாகன்கள் கூறியது: வழக்கமாக வனத்தில் தீனிக்கு காடுகாடாக அலைவோம். இங்கே எல்லாமே இருப்பிடத்திற்கே வந்தது. அதனால் நாங்கள் யானைகளையும் நன்றாக கவனிக்க முடிந்தது, நாங்களும் ஓய்வெடுக்க முடிந்தது என்றனர். கோயில் யானைகளை பொறுத்தவரை பல்வேறு ஊர்களி லிருந்து பாகன்கள், துணைப் பாகன்கள், உதவியாளர்கள் என்று 102 பேர் வந்திருந்தனர். வனத்துறை யானைகளின் பாகன்கள் உதவியாளர்கள் 40 பேருக்கு மேல் வந்திருந்தனர்.

யானைகள் கூடிக்கலைந்த காட்சியை விட இவர்களின் பிரிவு உணர்ச்சி மயமானது என்பது அவர்களிடம் பேசியபோது தெரிந்து கொள்ள முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x