Published : 22 May 2017 10:57 AM
Last Updated : 22 May 2017 10:57 AM

வறுமை, உற்சாகமில்லா சூழ்நிலைகளை உடைத்தெறிந்து வெளியே வாருங்கள்: மாணவர்களுக்கு சகாயம் ஐஏஎஸ் அழைப்பு

வறுமை, உற்சாகமில்லா சூழ்நிலை களை உடைத்தெறிந்து மாணவ, மாணவியர் வெளியே வரவேண்டும் என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்தார்.

பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் லீடர்ஸ் மற்றும் மக்கள் பாதை இயக்கம் சார்பில் நடைபெற்ற, இந்திய குடிமையியல் பணி தேர்வுக்கான ஒரு வருட இலவச பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியில் சகாயம் ஐஏஎஸ் பேசியதாவது:

மனிதனின் ஆற்றல் அளப்பரியது. அதிலும் தமிழர்களின் ஆற்றல் அளப் பரியது. அதனை தன்னம்பிக்கையுடன் கையாளுங்கள். வாழ்கையில் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் வறுமையில் வாழ்ந்தவர்கள் தான். உற்சாகமாக இருக்கும்போது தான் வெற்றிபெற முடியும். எனவே வறுமை, வெறுமை, உற்சாகமில்லா சூழ்நிலைகளை உடைத்தெறிந்து வெளியே வாருங்கள். லட்சியங் களை கைவிடாதீர்கள். தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள். சரித்திரத்தை மாற்றுகின்ற முடிவுகளை எடுங்கள். தமிழுக்காக சேவை செய்யுங்கள். அசாத்திய துணிச்சலுடன் இருங்கள். இந்த சமூகத்துக்கு ஏதாவது திருப்பி அளிக்க முடியுமானால் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று உறுதி கொள்ளுங்கள். இந்திய குடிமையியல் பணிக்கு தமிழகத்திலிருந்து தேர்வு எழுதுபவர்களில் பத்து சதவீதம் பேர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன். இது ஐம்பது சதவீதமாக உயர வேண்டும் என்றார் அவர்.

ஸ்மார்ட் லீடர்ஸ் ஐஏஎஸ் பயிற்சி மைய நிர்வாக இயக்குநர் சிவராஜவேல் வரவேற்றார். சாதிக் நன்றி கூறினார். ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x