Published : 17 Jan 2014 10:55 AM
Last Updated : 17 Jan 2014 10:55 AM

புத்தகக் காட்சிக்கு வருமா அம்மா உணவகம்?

சென்னைப் புத்தகக் காட்சி வளாகத்தில் செயல்படும் கேன்டீனில் உணவுப் பண்டங்களின் விலை கடுமையாக இருப்பதையும் வாசகர்கள் இடையே இது பெரும் அதிருப்தியை உருவாக்கியிருப்பதையும் பற்றி ‘தி இந்து’வில் வெளியான செய்தி வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடிதங்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் என ‘தி இந்து’வைத் தொடர்பு கொண்ட நூற்றுக்கணக்கான வாசகர்கள் ஒரு முக்கியமான மாற்று யோசனையை முன்வைத்தனர். அது: ‘அம்மா உணவகம்’.

சாமானிய மக்களுக்காகக் கொண்டு வரப்பட்ட ‘அம்மா உணவகங்கள்’ ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் வந்துசெல்லும் புத்தகக் காட்சியில் ஏன் தற்காலிகமாக அமைக்கப்படக் கூடாது? என்று கேட்டனர் வாசகர்கள்.

இது நியாயமான ஒரு கோரிக்கை. புத்தகக் காட்சி போன்ற ஓர் இடத்தில் அமைக்கப்படும் உணவகத்தில் நிர்ணயிக்கப்படும் உணவின் விலை எல்லாத் தரப்பு வாசகர்களையும் மனதில் கொண்டதாக அமைய ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். அப்படி அமையாமல் – ஒரு தயிர் சாதம் ரூ. 50; சாம்பார் சாதம் ரூ. 60-க்கு விற்கப்படும் சூழலில் – அரசின் உதவியை எதிர்பார்ப்பது நியாயம்தானே?

என்ன சொல்கிறது ‘பபாசி’?

“புத்தகக் கண்காட்சி நடத்த செலவினங்கள் மிகவும் அதிகமாக உள்ளது. அதை எதிர் கொள்ளும் விதமாகவே உணவகங்களை அனுமதிக்கிறோம். உணவு விலையைக் குறைப்பது தொடர்பாகப் பேசிவருகிறோம். உணவுடன் தண்ணீருக்குத் தனியாக காசு வாங்கக் கூடாது என்றுகூறியிருக்கிறோம். வாசர்கள் கூறியதுபோல, ‘அம்மா உணவகம்’ கொண்டுவரலாம்தான். அடுத்த ஆண்டு இந்த யோசனையைப் பரிசீலிப்போம்.’’ என்றார் ‘பபாசி’ செயலர் புகழேந்தி.

உணவு விலையை விவாதித்த வாசகருக்கு அடி உதை

சென்னைக்கு இருதய சிகிச்சைக்காக வந்த ஒருவர், இங்கு புத்தகக் காட்சி நடப்பதை அறிந்து வந்தார். பின்னர், உணவகம் சென்ற அவர் சாப்பாட்டுக்கான ரசீதை வாங்கிப்பார்த்தபோது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறார். இதுகுறித்து அவர் விளக்கம் கேட்க, உணவக ஊழியருக்கும் அந்த வாசகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்கு வந்த சைதை காவல் ஆய்வாளர் குணவர்மன் தலைமையிலான போலீஸார் அந்த வாசகரை அடித்து உதைத்தனர்.

நூற்றுக் கணக்கானோர் முன்னிலையில், நோயாளியான அவர் வலி தாங்காமல் அலறியது பார்ப்பவர்களைப் பரிதவிப்பில் ஆழ்த்தியது. அவர்களில் ஒருவர் - லயோலா கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் காவல் துறையினரிடம் நியாயம் கேட்கச் செல்ல, அவரையும் போலீஸார் தாக்கினர். காவல் துறையின் அத்துமீறலை நேரில் பார்த்தவர்களில் ஒருவரான எழுத்தாளர் குட்டி ரேவதி “இது அப்பட்டமான மனித உரிமை மீறல், ஜனநாயக விரோதம். சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மற்றும் போலீஸார்மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் குணவர்மனிடம் விளக்கம் கேட்க நாம் முயன்றபோது அவர் பேச முன்வரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x