Published : 07 Jan 2014 11:44 AM
Last Updated : 07 Jan 2014 11:44 AM

மணல் இரண்டாம் நிலை விற்பனை ஊழல் பெருக வழி வகுக்கும்: ராமதாஸ்

மணல் இரண்டாம் நிலை விற்பனை கிடங்குகளை தனியார் மூலம் அமைக்க அரசு முடிவு செய்திருப்பது ஊழல் பெருக வழி வகுக்குமே தவிர மணல் விலையை கட்டுப்படுத்தாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: மணல் விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை என்ற பெயரில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மணல் இரண்டாம் நிலை விற்பனை கிடங்குகளை தனியார் மூலம் அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மணல் விற்பனையில் ஏற்கனவே பல முறைகேடுகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்த முடிவு மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

2003 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளும் அரசுடைமையாக்கப்பட்டன. ஆற்றுப்படுகைகளில் தனியார் விருப்பம் போல மணல் எடுப்பதால் விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அதைத் தடுத்து ஆறுகளில் மணல் எடுப்பதை முறைப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்போதைய அரசின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

ஆனால், அரசுடைமையாக்கப்பட்ட குவாரிகளில் அரசே பொதுப்பணித்துறை மூலம் நேரடியாக மணலை வெட்டி எடுத்து விற்பனை செய்யாமல், குவாரி நிர்வாகத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது.

இந்த தனியார் நிறுவனங்கள் மீது எந்த கண்காணிப்பும் மேற்கொள்ளப்படாததால் அவை கட்டுப்பாடின்றி, விருப்பம் போல மணலை எடுத்து விற்பனை செய்தன. இதனால் விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு மாறாக விவசாயம், சுற்றுச்சூழல் இரண்டுமே சீரழிந்தன.

அதன் பின் 2006 ஆம் ஆண்டில் பதவியேற்ற தி.மு.க. அரசும் இதே கொள்கையை கடைப்பிடித்தது. ஆற்று மணல் கொள்ளையால் இயற்கையும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதைக் கண்டித்து எனது தலைமையில் பல்வேறு போராட்டங்களை பா.ம.க. நடத்தியது.

2008 ஆம் ஆண்டில் மணல் குவாரிகளை ஒட்டுமொத்தமாகவே தனியாரிடம் ஒப்படைக்க தி.மு.க. அரசு தீர்மானித்த போது கடுமையாகப் போராடி அதை தடுத்து நிறுத்தியதும் பாட்டாளி மக்கள் கட்சி தான். மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் மணல் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடாகும்.

ஆனால், இப்போதுள்ள அ.தி.மு.க அரசோ மணல் விற்பனை தொடர்பான அனைத்து பணிகளையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி நிற்கிறது. இதனால் அந்த நிறுவனங்கள் வைத்ததே சட்டம் என்றாகிவிட்ட நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் இரண்டாம் நிலை மணல் விற்பனை நிலையங்களை அமைக்க அரசு தீர்மானித்திருக்கிறது.

இதனால், மணல் விலை குறையும் என்ற தமிழக அரசின் வாதம் தவறானதாகும். ஏற்கனவே, மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இரண்டாம் நிலை விற்பனை என்ற பெயரில் ஆற்று மணலை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றன.

அரசிடமிருந்து ஒரு லோடு மணலை ரூ. 1000 என்ற விலையில் வாங்கும் அந்த நிறுவனங்கள் அதே இடத்தில் அந்த மணலை ஒரு லோடு ரூ.6000 முதல் ரூ.9000 வரை விற்பனை செய்கின்றன. அதுமட்டுமின்றி, ஒரு நாளைக்கு ஆயிரம் லோடு விற்பனை செய்யப்பட்டால், வெறும் 100 லோடு மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாக கணக்கில் காட்டி வருகின்றனர்.

இந்த வகையில் மட்டும் ஆண்டுக்கு ரூ. 24,000 கோடி வீதம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 2.40 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இப்போது அனைத்து மாவட்டங்களிலும், மணல் இரண்டாம் நிலை விற்பனை நிலையங்களை அமைக்க தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப் பட்டால், ஆறுகளிலிருந்து மணல் அளவின்றி கொள்ளையடிக்கப்படும் நிலை உருவாகும்.

அதுமட்டுமின்றி, மணல் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் தனியாருக்கு சென்று விடும். மணல் விற்பனையில் நடைபெறும் ஊழல்களை அதிகரிக்கவே இந்த புதிய ஏற்பாடு வழிவகை செய்யும்.

எனவே, தனியார் மூலம், மணல் இரண்டாம் நிலை விற்பனை நிலையங்களை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். ஏற்கனவே, தனியார் மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டதில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ. 2.50 லட்சம் கோடி ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரனைக்கு ஆணையிட வேண்டும்.

அனைத்து குவாரிகளிலும் தமிழக அரசே நேரடியாக பணியாளர்களை அமர்த்தி, குறைந்த விலையில் ஆற்று மணலை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x