Published : 14 Feb 2016 11:25 AM
Last Updated : 14 Feb 2016 11:25 AM
தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சந்தித்து, தனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
தமிழிசை சவுந்தரராஜனின் மகன் டாக்டர் சுகநாதனுக்கும், கோவை தொழிலதிபர் டி.செல்வராஜின் மகள் டாக்டர் திவ்யாவுக்கும் வரும் 17-ம் தேதி காலை 9 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் திருமணம் நடைபெறவுள்ளது. அன்று மாலை 6.30 மணிக்கு திருமண வரவேற்பு நடக்கவுள்ளது. இந்த திருமண விழாவுக்கான அழைப்பிதழை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் குடும்பத்துடன் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் திமுக, மக்கள் நலக் கூட்டணி, பாஜக ஆகிய கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இச்சூழலில் விஜயகாந்தை தமிழிசை சந்தித்துள்ளார். இது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய தமிழிசை, ‘‘எனது மகன் திருமணத்துக்கு அழைப்பதற்காகவே விஜயகாந்தை சந்தித்தேன். கூட்டணி குறித்து விரைவில் சந்தித்துப் பேசுவோம்’’ என்றார்.
வரும் 17-ம் தேதி சென்னை வரும் அமித்ஷாவுடன் விஜயகாந்தை சந்திக்க வைப்பதற்கான முயற்சியில் தமிழக பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT