Published : 06 Apr 2017 08:40 AM
Last Updated : 06 Apr 2017 08:40 AM

காவல் அதிகாரிகளை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை யொட்டி, 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். மேலும் காலியாக இருந்த 18 பணியிடங்களுக்கு புதிய அதிகாரிகள் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் பணப் புழக்கத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட சில வேட்பாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அவர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். இதில், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் சமீபத்தில் மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை தினகரன் தரப்பு பணப்பட்டுவாடா செய்ததாக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன. அப்போது சில அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் புகாரில் கட்சிகள் தெரிவித்தன.

இதையடுத்து, 3 ஐபிஎஸ் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன் படி, சென்னை பெருநகர காவல் வடக்கு கூடுதல் ஆணையராக இருந்த சாரங்கன் மாற்றப்பட்டார். அப்பதவியில் காவல்துறை இயக்க பிரிவு ஐ.ஜி., எச்.எம். ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், இணை ஆணையராக (வடக்கு) இருந்த கே.ஜோஷி நிர்மல் குமாருக்கு பதில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டிஐஜி.,என்.பாஸ்கரன் நியமிக்கப் பட்டுள்ளார். அதே போல் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் எஸ்.ஜெயக்குமார் மாற்றப்பட்டு, பூக்கடை துணை ஆணையர் ஜி.செஷாங் சாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

புளியந்தோப்பு துணை ஆணையர் எஸ்.செல்வகுமார் மாற்றப்பட்டு, பெருநகர பாதுகாப்பு பிரிவு துணை ஆணையர் ஜி.ராமர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், காலியாக இருந்த வண் ணாரப்பேட்டை உதவி ஆணையர் பதவியில் ஆர்.அர்னால்டு ஈஸ்டர், திருவொற்றியூர் உதவி ஆணையர் பதவியில் ரகுராம், எம்.கே.பி நகர் உதவி ஆணையராக அன்பழகன், ராயபுரம் உதவி ஆணையராக தனவேல் ஆகியோரும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர, ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, கொருக் குப்பேட்டை, காசிமேடு, கொடுங் கையூர், மீன்பிடிதுறைமுகம் ஆகிய காவல் நிலையங்களில் காலியாக இருந்த ஆய்வாளர் பணியிடங்களுக்கும் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவுகளை தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x