Published : 02 Feb 2017 03:52 PM
Last Updated : 02 Feb 2017 03:52 PM

துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம்

ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், வரலாற்றுப் பெருமைமிக்க தமிழக சட்டப்பேரவையை துதிபாடும் மன்றமாக மாற்றி, இந்தக் கூட்டத் தொடரை நிறைவு செய்துள்ளனர் என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அதேவேளையில், திமுக எப்போதும் ஜனநாயக மரபுகளை மதித்து சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படும் என அவர் கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விமர்சித்து திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், அவர் இவ்வாறெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.

கடிதம் விவரம்:

"23-01-2017 அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டமன்றக் கூட்டத் தொடரில் பொறுப்புள்ள ஜனநாயக ரீதியிலான எதிர்க்கட்சியாக திமுக தனது செயல்பாடுகளை முன்வைத்தது.

ஜல்லிக்கட்டு அனுமதிக்கான தமிழக அரசின் சட்டம், நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வகை செய்யும் மசோதா எனத் தமிழக நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சிகள் முழுமையானதா உளப்பூர்வமானதா என்பதைக் கடந்து, மாநிலத்தின் நலன் கருதி தி.மு.கழகம் அவற்றை முழுமனதாக ஆதரித்து, இந்த இயக்கம் எப்போதும் தமிழர்களின் பக்கம் இருந்து பாதுகாக்கும் என்பதை உணர்த்தும்.

அதேநேரத்தில், ஆளுங்கட்சியின் குறைபாடுகளை, நிறைவேற்றாத வாக்குறுதிகளை, மக்கள் விரோத, ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துக்கூறவும் தயங்கவில்லை.

ஆனால், அதற்கு சட்டப்பேரவைத் தலைவர் முழுமையான வாய்ப்புகளை வழங்காமல், ஆளுங்கட்சியினரின் துதிபாடும் பேச்சுகளுக்கே அதிக நேரத்தை ஒதுக்கித் தந்தார். அதிலும் ஆளுங்கட்சியினருக்கு வழங்கப்படும் உரிமைகள் எதிர்க்கட்சியினருக்கு மறுக்கப்பட்டன.

முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரும் அவரது அமைச்சரவையினரும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தமிழகத்தை அதிக காலம் ஆட்சி செய்த முதல்வரான கருணாநிதியின் பெயர் சொல்லி பல முறை பேசியிருக்கிறார். முன்னாள் முதல்வர்கள் பலர் இருப்பதால் இப்படிப் பெயர் சொல்லிக் குறிப்பிடலாம் என சபாநாயகரும் அதற்கு அனுமதியளித்தார்.

இப்போது அதே வழியில், முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் பெயரை நமது கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டபோது, அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னர் கடைப்பிடித்த நடைமுறைகளை நாம் சுட்டிக்காட்டிய போதும் பேரவைத் தலைவர் சமாதானமடையவில்லை. நாளுக்கொரு விதி ஆளுக்கொரு விதி முன்னாள் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகள், அறிவித்த திட்டங்கள், நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்டவை எந்தளவில் செயல்பாட்டில் உள்ளன என்பதையும் மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்பதையும் தான் கழகத்தினர் கேள்விகளாக எழுப்பினர்.

இந்தக் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாத ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், வரலாற்றுப் பெருமைமிக்க தமிழக சட்டமன்றத்தை துதிபாடும் மன்றமாக மாற்றி, இந்தக் கூட்டத் தொடரை நிறைவு செய்துள்ளனர்.

வர்தா புயலால் சென்னை மாநகரம் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில், அப்போது வீழ்ந்த மரங்களின் கழிவுகளை மாநகராட்சியின் பூங்காக்கள்-விளையாட்டு திடல்கள் ஆகியவற்றில் கொட்டி வைத்திருப்பதை எப்போது அகற்றி, மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அந்த இடங்கள் பயன்படும்படி செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டமன்றத்தில் எழுப்பினேன். அதற்கு யார் பதிலளிப்பது, என்ன பதிலளிப்பது எனப் புரியாமல் கல்வி அமைச்சரும் உள்ளாட்சித் துறை அமைச்சரும் திண்டாடிய செய்தியை ஊடகங்கள் வாயிலாக உங்களில் பலரும் அறிந்திருக்கக் கூடும்.

மக்களுக்கானத் திட்டங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடக்க வேண்டிய சட்டப்பேரவையை, அவையில் இல்லாதவர்களைப் பற்றிப் புகழ்பாடும் மன்றமாக மாற்றிய விதிமீறல்களே நடந்து முடிந்த கூட்டத் தொடரின் ‘பெருமை’களாக இருந்தன.

சின்னம்மா..சின்னம்மா என்கிற வார்த்தைகள் தான் ஆளுங்கட்சித் தரப்பில் அதிகளவில் உச்சரிக்கப்பட்டன. மக்களின் அங்கீகாரம் பெறாத-மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படாத - மக்களின் மன்றமான சட்டப்பேரவையில் இல்லாத ஒருவரைப் பற்றிப் பேசலாமா என அவையின் மரபுகளையும் விதிகளையும் சுட்டிக்காட்டி பேரவைத் தலைவரிடம் கழகத்தினர் கேள்வி எழுப்பிய போது, "ஆளுங்கட்சியினர் தங்கள் கட்சியின் தலைமையைப் புகழ்ந்து பேசுகிறார்கள். நீங்களும் வேண்டுமானால் உங்கள் தலைமையைப் புகழ்ந்து கொள்ளுங்கள்" என்று புதிய 'துதிச் சலுகை' அறிவிப்பு செய்கிறார் பேரவைத் தலைவர்.

நமது உயிருக்கு நிகரானத் தலைவரை எப்போதும் நம் நெஞ்சில் வைத்து போற்றுகிறோம். பாராட்டுகிறோம். அந்தப் பாராட்டுகள், மக்கள் நலன் பற்றிப் பேசக்கூடிய அவையின் நடவடிக்கைகளைத் திசை மாற்றுவதாக இருக்கக் கூடாது.

அதனை, தோல்வியே காணாமல் 13 முறை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையாளரான கருணாநிதியும் விரும்ப மாட்டார்கள். அவருடைய வழிகாட்டுதலிலே உருவான நாம் ஒருபோதும் இத்தகைய செயல்களில் ஈடுபட ஆர்வம் காட்ட மாட்டோம்.

அவருடைய சாதனைகளைப் பாராட்டிப் பேசியிருப்போமே தவிர, மக்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டிய நேரத்தில் ஆலாபனை செய்து கொண்டிருக்க மாட்டோம். இதை நான் பேரவையிலே சுட்டிக்காட்டிய போதும் பயனில்லாமல் போய்விட்டது.

இன்னும் சொல்லப் போனால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் தலைவர் கருணாநிதியையோ, என்னையோ புகழ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படி மீறி பேசிய ஒரு சில கழக சட்டமன்ற உறுப்பினர்களேயே "நேரடியாக கேள்வியை கேளுங்கள்" என்று நான் கடிந்து கொண்டதும் பத்திரிக்கைகளில் செய்திகளாக வந்தது. அதையும் நீங்கள் படித்திருப்பீர்கள்.

தி.மு.க. இப்படித்தான் இந்த கூட்டத்தொடரில் மட்டுமல்ல எந்த கூட்டத் தொடரிலும் சட்டமன்ற ஜனநாயகத்தை போற்றிப் பாதுகாத்து வந்திருக்கிறது. கருணாநிதியின் வழிகாட்டுதலில் இனிமேலும் திமுக ஆக்கப்பூர்வமாக ஜனநாயக மரபுகளைப் பின்பற்றிச் செயல்படும்"

இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x