Published : 01 Jan 2014 12:41 PM
Last Updated : 01 Jan 2014 12:41 PM

தருமபுரி தொகுதியில் அன்புமணி போட்டி?- ராமதாஸ் சூசகம்

சேலம் மாவட்டம் மேட்டூர் குஞ்சாண்டியூரில் பா.ம.க. நிர்வாகிகளுடனான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மேற்கு மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது: வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். வீடுகள்தோறும் சென்று தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் ஒரு வீட்டுக்கு மூன்று முறையாவது சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். தினமும் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களைத் திரட்டி, பாமக கொள்கையை பரப்பி நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.

தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டால் எந்தளவுக்கு வெற்றி பெறுவார் என்று நீங்கள் நம்புகிறீர்களோ, அந்த அளவுக்கு எனக்கும் நம்பிக்கை உள்ளது.

மேட்டூரில் விரைவில் சமூகநீதி பெண்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 10,000க்கும் மேற்பட்ட பெண்களை கட்சி நிர்வாகிகள் திரட்டி, பாமக பலத்தை நிரூபிக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தொண்டர்கள் அமைதியான முறையில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மது குடிப்பதால் விளையும் கேடு குறித்து கார்டூன் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரத்தை வெளியிட்ட ராமதாஸ், இவற்றை வீடுகள் தோறும் வினியோகித்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

2வது பட்டியல் அடுத்த வாரம்

சூசகம் சேலத்தில் நேற்றிரவு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், சைபர் ஆர்மி என்ற அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை அப்புறப்படுத்தும் மாற்று கட்சியாக பா.ம.க.வை மக்கள் பார்க்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களின் 2வது பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x