Published : 08 Apr 2017 11:06 AM
Last Updated : 08 Apr 2017 11:06 AM

ஈரானிலிருந்து விடுதலையான 15 மீனவர்களும் சொந்த ஊர் திரும்பினர்: அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் சந்திப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஈரான் நாட்டு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் மீட்கப்பட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் நேற்று தங்களது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியை சேர்ந்த அ.கென்னடி (45), என்.கிளவுடியன் (50), எம்.சலேட்ராஜா (33), எம்.சாகர் (39), ஆர்.வின்சென்ட் (32), இடிந்தகரையைச் சேர்ந்த இ.அந்தோணி (33), எஸ்.பிரசாத் (25), கன்னியாகுமரியை சேர்ந்த விக்டர் வர்கீஸ் (40), ஷ்ரிஜித் (32), ஷ்ரினு (30), ஹெபா (42), ஜார்ஜ் (33), ரவி (31), ஜேக்கப் (30), ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (33) ஆகிய 15 பேர் பஹ்ரைனில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி படகில் சென்று இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டியதாக ஈரான் நாட்டு கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். இவர்களை மீட்கக்கோரி உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஈரான் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, 15 மீனவர்களும் மீட்கப்பட்டனர். பஹ்ரைனிலிருந்து நேற்றுமுன்தினம் இரவில் இவர்கள் சென்னைக்கு வந்தனர். அங்கிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்களும் நேற்று திருநெல்வேலி வந்து, மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதுபோல், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவானை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

உணவு வழங்கவில்லை

பி்ன்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறும்போது, ‘‘எல்லை தாண்டியதாக எங்களை ஈரான் கடற்படையினர் பிடித்துச் சென்று விசைப்படகிலேயே சிறை வைத்தனர்.

எங்களுக்கு சரியான உணவு, தண்ணீர் வழங்கவில்லை. எங்களிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். பஹ்ரைனில் எங்களுடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டவந்த சக தமிழர்கள்தான், எங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். எங்களை மீட்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி” என்றனர்.

இம்மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில், சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர் ஜஸ்டின் ஆண்டனி ஆகியோர், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x