Published : 27 Feb 2017 09:04 AM
Last Updated : 27 Feb 2017 09:04 AM

அறுந்து கிடந்த மின் கம்பியால் விபரீதம்: தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் இறந்தான். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரியத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை அடுத்த மாமல்லபுரம் பாவணஞ்சேரி எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த இவரது மகன் தனுஷ் (14). தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தில் மயானக் கொள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் விஜயகுமார் வந்திருந்தார்.

அப்போது அப்பகுதியில் உள்ள கருமாரியம்மன் அம்மன் கோவில் தெரு பின்புறத்தில் தனுஷ் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் காகிதங்களை எடுத்துக்கொண்டிருந்தபோது, அங்கு ஒரு மின் கம்பி அறுந்து கிடந்தது. அதை கவனிக்காத சிறுவன் தனுஷ் மின் கம்பியை மிதித்துவிட்டான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் தனுஷ் படுகாயம் அடைந்தான். இதைப் பார்த்த அப்பகுதியினர் ஓடிவந்தனர். ஆனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய தனுஷ் சம்பவ இடத்திலேயே இறந்தான்.

ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மின்சாரத் துறை ஊழியர்களின் அலட்சியத் தால்தான் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறி நெடுங்குன்றம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த பீர்க்கன்காரணை போலீஸார் மற்றும் மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இப்பிரச்சினைக்கு காரணமான மின்சாரத்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x