Last Updated : 13 Mar, 2014 12:43 PM

 

Published : 13 Mar 2014 12:43 PM
Last Updated : 13 Mar 2014 12:43 PM

தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி இன்றி தவிப்பு:பாம்புகள் நடமாட்டத்தால் நோயாளிகள் அச்சம்

தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் நோயாளிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

சென்னை தாம்பரம் அருகே சானடோரியத்தில் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் காசநோய் சிகிச்சை மட்டுமின்றி எச்ஐவி / எய்ட்ஸ் நோயாளிகள் பாதுகாப்பு மையமும் இயங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். சுமார் 500 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்த பிறகே, அவர்களுக்கு காசநோய் இருக்கிறதா, இல்லையா என்பது உறுதி செய்யப்படுகிறது. அதன்பின், சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றால், அதற்கான வசதி மருத்துவமனையில் இல்லை. இதனால் நோயாளிகள் சிடி ஸ்கேன் எடுக்க அருகில் உள்ள தனியார் ஸ்கேன் மையம், ஸ்டான்லி அல்லது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

75 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ஆனால், இதுவரை இங்கு சிடி ஸ்கேன் வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எய்ட்ஸ் நோயாளிகள் தற்கொலை

இந்த மருத்துவமனையில் எய்ட்ஸ் / எச்ஐவி நோயாளிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு பெரும்பாலான டாக்டர்கள், நர்ஸ்களும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கின்றனர். சில நோயாளிகளை மட்டுமே உறவினர்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.

ஆதரவற்ற நோயாளிகள் தனிமையில் வாடுகின்றனர். மற்றவர்களின் கேலிப் பேச்சுக்கு ஆளாகும் நோயாளிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. மருத்துவமனையில் எச்ஐவி / எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.

மருந்தாளுநர் பற்றாக்குறை

தொடர் சிகிச்சை எடுத்து வரும் காசநோயாளிகள் மருந்து, மாத்திரைகளை வாங்க மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். ஆனால், மருத்துவமனை மருந்தகத்தில் மருந்தாளுநர்கள் பற்றாக்குறை நிலவுவதால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து மருந்து, மாத்திரைகளை வாங்கிச் செல்ல வேண்டியுள்ளது.

இயற்கை சூழலுடன் பல ஏக்கர் பரப்பளவில் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை அமைந்துள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், ஆங்காங்கே குப்பைகள் குவிந்துள்ளன. செடி, கொடிகள் வளர்ந்து புதராக காணப்படுகிறது. எனவே பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் கீதாலட்சுமி கூறியதாவது:

அந்த மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் முறைப்படி எழுதினால் நிச்சயமாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். எச்ஐவி/எய்ட்ஸ் நோயாளிகளுக்கு டாக்டர்கள், நர்ஸ்கள் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கின்றனர். அவர்களுக்கு ரொட்டி, பால் நேரத்திற்கு வழங்கப்படுகிறது.

ஆனால் நோயாளிகளை, குடும்பத்தினரே புறக்கணிக்கின்றனர். பெரும்பாலான நோயாளிகளை பார்க்க உறவினர்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும், அவர்களை தீண்டத் தகாதவர்கள்போல தூரத்தில் இருந்தே பார்த்து செல்கின்றனர். இதனால், நோயாளிகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனாலேயே நோயாளிகள் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x