Published : 03 Feb 2014 09:29 PM
Last Updated : 03 Feb 2014 09:29 PM

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்

இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களை தண்டிக்க, ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

இது குறித்து சட்டப்பேரவையில் இன்று ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:

"இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை பற்றி உறுப்பினர்கள் இங்கே பேசினார்கள். எங்களைப் பொறுத்த வரையில், இலங்கை உள்நாட்டுப் போரில் சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும்.

இனப் படுகொலையை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; அதுவரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; தமிழ் ஈழம் குறித்து இலங்கையில் உள்ள மற்றும் வெளிநாடுகளில் வாழுகின்ற இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை நாட்டில் நடைபெறும் அனைத்துக் கூட்டங்களையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும்; இலங்கை வீரர்கள் எவருக்கும் ராணுவப் பயிற்சியை இந்தியாவில் அளிக்கக் கூடாது; இலங்கை நாட்டுடனான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்பனவற்றில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இது குறித்து பல்வேறு கால கட்டங்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. எந்த ஒரு தீர்மானத்தின் மீதும் மத்திய அரசு இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசுக்கு அப்போது ஆதரவு அளித்த தி.மு.க.வும் வாய் மூடி மவுனியாகத்தான் இருந்தது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பும், மத்திய அரசு வெளியுறவுத் துறை அமைச்சரை அந்த மாநாட்டிற்கு அனுப்புவதில் உறுதியாக உள்ளது என்பதை அறிந்து;

கடைசி முயற்சியாக, மாநாடு கூடுவதற்கு இரு நாட்கள் முன்பு இந்த மாமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பாக எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தினை நிறைவேற்றினோம்.

இந்தத் தீர்மானத்தினை, தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டார். மத்திய அரசின் இந்தச் செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராக நான்கு நாடுகள் தீர்மானம் கொண்டு வரப்போவதாக செய்திகள் வந்துள்ளன.

எங்களைப் பொறுத்த வரையில், இந்தியாவே, இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களை தண்டிக்க தனித் தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக கொண்டு வந்து அதற்கு ஆதரவாக மற்ற நாடுகளை வாக்களிக்க வைத்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால், தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இதனை நிச்சயம் நிறைவேற்றாது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அப்போது ஆட்சி மாறும். காட்சிகளும் மாறும். மத்திய அரசின் கொள்கைகளை தீர்மானிக்கக் கூடிய நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும். அப்போது, ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து, அதனை வெற்றி பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.

அழகிரி விவகாரத்தில் கேள்வி

முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்து கூறும்போது, "தற்போது, தன்னுடைய இளைய மகன் மு.க.ஸ்டாலின் வாழ்வு பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரி சொல்லியவற்றை பத்திரிகையாளர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதோடு நின்றுவிடாமல், பாரதப் பிரதமருக்கு டி.ஆர். பாலு மூலம் கடிதம் எழுதச் சொல்லியிருக்கிறார். பாலுவும், 27.1.2014 அன்று பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், எல்.டி.டி.ஈ., மத அடிப்படைவாதிகள் மற்றும் அரசியல் விரோதிகளால்மு.க. ஸ்டாலினுக்கு ஆபத்து உள்ளது என்று குறிப்பிட்டு, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு கொடுக்குமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளன.

இலங்கை இனப்படுகொலையில் தமிழ் ஈழ விடுதலை அமைப்பினர் மட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், எல்.டி.டி.ஈ. அமைப்பிடமிருந்து ஆபத்து என்பது இல்லாத ஒன்றாகும்.

எந்த ஒரு பெயரும் குறிப்பிடாமல், மத அடிப்படைவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவும் கற்பனையான ஒன்று. கடைசியாக, பல தரப்பட்ட அரசியல் விரோதிகளிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. யார் யார்

அந்த அரசியல் விரோதிகள் என்பது குறிப்பிடப்படவில்லை. கடிதம் எழுதியுள்ள தருணத்தையும், தற்போது கருணாநிதியின் குடும்பத்தில் நடக்கும் குழப்பத்தையும் ஒப்பிடுகையில் மு.க. அழகிரியின் மூலம் ஆபத்து என்பது மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது இளைய மகனுக்கு மூத்த மகனால் ஆபத்து என்றவுடன் பாரதப் பிரதமருக்கு வரிந்து கட்டிக் கொண்டு கடிதம் எழுதச் சொல்லும் கருணாநிதி, பத்திரிகை எரிப்புச் சம்பவம் மற்றும் தா. கிருட்டிணன் கொலை வழக்குகளில் என்ன நிலைப்பாட்டை எடுத்தார்? தனக்கு ஒரு நீதி; தன் குடும்பத்திற்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதி, என்ற ரீதியில் செயல்படும் கருணாநிதியை தலைவராகக் கொண்டு செயல்படும் தி.மு.க.வினர், சட்டம் - ஒழுங்கு குறித்து பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது" என்றார் முதல்வர் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x