Last Updated : 14 Apr, 2017 12:49 PM

 

Published : 14 Apr 2017 12:49 PM
Last Updated : 14 Apr 2017 12:49 PM

டெல்லியில் 32-வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம்: சேலை அணிந்து ஊர்வலம்

30 நாள் கடந்தும் தங்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாத பிரதமரின் கவனத்தை ஈர்ப்பதற்காக டெல்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள் சேலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இன்று ஒரே நாளில் மட்டும் 80 தமிழர்கள் டெல்லிக்கு வந்துள்ளனர்.

டெல்லியின் ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 32-வது நாளை எட்டியுள்ளது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் இந்த போராட்டம் நடைபெறு வருகிறது.

வங்கிகடன் ரத்து, வறட்சிக்கானக் கூடுதல் நிவாரணம் மற்றும் காவிரி மேலாண்மை அமைப்பது உட்படப் பலதும் அவர்கள் கோரிக்கைகளாக உள்ளது. இதில், அன்றாடம் அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்தை கவரும் வகையில் பல்வேறு வகை போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தவகையில் இன்று விவசாயிகள் 9 பேர் பெண்களைப் போல் சேலைகளை கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் போராட்டத்தைக் கண்டு கொள்ளாத பிரதமர் நரேந்தர மோடியின் கவனத்தை கவர இதை செய்திருப்பதாகக் கூறுகின்றனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் அய்யாகண்ணு கூறுகையில், "கடந்த மார்ச் 14 முதல் நாம் டெல்லியில் போராட்டம் நடத்தியும் பிரதமர் மோடி எங்களை அழைத்து பார்க்கவில்லை. நாம் அனைவரும் பெண்ணாக இருந்தாலாவது மனம் இறங்கி சந்திப்பார் என்ற நம்பிக்கையில் இன்று சேலை கட்டி உள்ளோம். அவரது கவனத்தை கவர்வது மட்டுமே இதன் நோக்கம் ஆகும்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு தமிழகத்தில் கிடைத்து வந்த ஆதரவு கூடி உள்ளது. இவர்களுடன் டெல்லியில் இணைந்து போராட்டம் நடத்த தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் இருநாட்களாக சுமார் 90 பேர் டெல்லிக்கு வந்து இறங்கியுள்ளனர். கோயம்புத்தூர், தஞ்சாவூர், பல்லடம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை உட்பட பல ஊர்களை சேர்ந்தவர்கள்.

இது குறித்து தஞ்சாவூரின் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் விமலநாதன் கூறுகையில், "நம் நாடு முழுவதிலும் பிரச்சனைக்குள்ளாகி இருக்கும் விவசாயிகளுக்கு டெல்லியில் அய்யாகண்ணு முன்னிருந்து போராட்டம் நடத்தி வருகிறார். இதற்கு மேலும் வலு சேர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டி நாங்கள் இங்கு வந்துள்ளோம். இங்கு வெற்றி கிடைக்கும் வரை உடன் இருப்போம். இதில் மேலும் பலர் கலந்து கொள்ள வேண்டி தமிழகத்தில் இருந்து வர இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிகட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் குழு ஒன்றும் இன்று திருநெல்வேலியில் இருந்து வந்துள்ளது. இவர்களுடன் மற்ற மாநில விவசாயிகளும் இணைந்து போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

மக்களவையின் அதிமுக உறுப்பினர்களான மயிலாடுதுறை பாரதிமோகன், தஞ்சை பரசுராமன் ஆகியோர் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x