Published : 28 Jun 2019 12:26 PM
Last Updated : 28 Jun 2019 12:26 PM

திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்

அமமுகவிலிருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாகப் பிரிந்தது. ஓபிஎஸ்ஸை ஓரங்கட்ட நினைத்த சசிகலாவுக்கு சிறை தண்டனை கிடைத்ததால் திடீரென டிடிவி தினகரனைக் கொண்டுவந்தார்.

பின்னர் ஈபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைய ஓபிஎஸ் 11 எம்.எல்.ஏக்களுடன் தனியாக நின்றார்.பின்னர் ஓபிஎஸ் ஈபிஎஸ்ஸுடன் இணைய  தினகரன் ஓரங்கட்டப்பட்டார். அவருக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏக்கள் பிரிந்தனர். பின்னர் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வென்றதன்மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் டிடிவி தினகரன்.

டிடிவி தினகரன் அணியிலான 18 எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். இடையில் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட உரசலில் செந்தில் பாலாஜி திமுகவுக்குத் தாவினார். பின்னர் கலைராஜன் திமுகவுக்குத் தாவினார்.

இதனிடையே மக்களவைத் தேர்தல், 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் வந்தது. அதிமுகவுக்கு எதிரான அலை திமுக பக்கம் சாதகமானது. ஆடிக்காற்றில் அம்மியே பறந்தபோது பலவித இக்கட்டான நிலையில் போட்டியிட்ட அமமுகவும்  பலத்த தோல்வியைத் தழுவியது. ஆனாலும், நல்ல வாக்குகளை பெற்றது.

அமமுக தோல்வியை ஏற்காதவர்கள் அதிமுகதான் எதிர்காலம் என தாவினர். பாப்புலர் முத்தையா அவரது ஆதரவாளர்கள் என வரிசைகட்டி அதிமுகவிற்கு பலரும் தாவி வருகின்றனர்.

இந்நிலையில் அமமுகவின் முக்கிய தூண்களில் ஒருவரான கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் பேட்டி கொடுத்தார்.

கட்சித் தலைமையை விமர்சித்தார். திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டினார். இந்நிலையில் அவர் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பேட்டி அளித்தனர்.

அதிமுகவுக்கு தங்க தமிழ்ச்செலவன் செல்வார் என்ற நிலையில், கட்சி நிர்வாகியுடன் செல்போனில் தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனை விமர்சித்துப் பேசியது பிரச்சினையை வெளிக்கொண்டுவந்தது.தங்க தமிழ்ச்செல்வனை கட்சியை விட்டு நீக்கியதாக டிடிவி தெரிவித்தார்.

இந்நிலையில் தான், எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை, அமைதியாக இருக்கப்போகிறேன் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார்.ஆனால் திடீரென அவர் திமுகவில் இணைய முடிவெடுத்துவிட்டதாக தகவல் வெளியானது.

இன்று காலை சட்டப்பேரவை கூட்டம் முடிந்தவுடன் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது. இந்த நேரத்தில் தனது ஆதரவாளர்களுடன் கூட்டம் முடிந்தவுடன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x