Published : 13 Apr 2014 10:37 AM
Last Updated : 13 Apr 2014 10:37 AM

அள்ளிக் கொடுத்தவர் கலைஞர்; அத்தனையும் கெடுத்தவர் ஜெயலலிதா: நடிகர் குமரி முத்து பேட்டி

கடந்த 25 ஆண்டுகளாக திமுக-வின் பிரச்சார சக்கரமாக சுழன்று கொண்டிருக்கிறார் நடிகர் குமரி முத்து. இந்தத் தேர்தலிலும் தனது டிரேடு மார்க் சிரிப்புடன் பிரச்சாரக் களத்தை கலகலப்பாக்கி வரும் அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி.

உங்களின் தேர்தல் பிரச்சாரம் எப்படி போகிறது?

பிரமாதமா போகுது. அரசியல் தெரியாம, கலைஞர் கொண்டுவந்த திட்டங்களை அதிமுக கொண்டு வந்ததா பிரச்சாரம் செய்யறாங்க. மேம்பாலங்கள், மெட்ரோ ரயில், ஒரு ரூபாய் அரிசி, பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிகளுக்கு உதவித் தொகை இப்படி பல திட்டங்களை அள்ளித்தந்தவர் கலைஞர். அத்தனையையும் கெடுத்தவர் ஜெயலலிதா அம்மையார்.

கர்ப்பிணிகளுக்கு கலைஞர் குடுத்த ஆறாயிரம் ரூபாயை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் நிறுத்திட்டார். மக்களுக்காக அந்தக் கட்சி உருப்படியா எதையுமே செய்யலைங்கிறதுதான் பிரச்சினையே. எம்.ஜி.ஆரிடம் நடிப்புக் கத்துக்கிட்ட ஜெயலலிதா, அவருக்கிட்ட அரசியல் கத்துக்கலையே...

அதிமுக ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்கிறீர்களா?

வீடில்லாதவங்களுக்கு மூணு சென்ட் இடம் குடுக்குறதா இந்தம்மா சொன்னாங்களே.. குடுத்தாங்களா? 56 வயசு பெரியவங்களுக்கு இலவச பஸ் பாஸ் குடுக்குறதா சொன்னாங்களே குடுத்தாங்களா? எதிர்பார்ப்போட இருந்த வயசான பெரியவங்கள ஏமாத்துறது பாவமில்லையா? என் தலைவர் ஆட்சிக்கு வந்ததுமே ரூ.7000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்யவும் ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கவும் தனது முதல் கையெழுத்தைப் போட்டாரே! மூணு மாசத்துல கரண்ட் பிரச்சினை தீரும்னு ஜெயலலிதா சொன்னாங்க. ஆட்சிக்கு வந்து மூணு வருஷம் முடியப் போகுது, இன்னும் மின்வெட்டு தீரலியே. கூடிய சீக்கிரமே தமிழ்நாட்டுல ஆறு மணி நேரம் மின்வெட்டு வரப் போகுது.

அதிமுக-வில் இணைந்திருக்கும் நடிகர் ரித்தீஷ், ஸ்டாலினை அவதூறாக பேசியுள்ளாரே?

தவறான ஆட்களுக்கு அங்கீகாரம் கொடுத்ததால் வந்த எதிர்வினை இது.

நடிகர்கள் சரத்குமார் ஜெயலலிதாவையும், விஜயகாந்த் மோடியையும் பிரதமர் ஆவார்கள் என்கிறார்களே?

மதுரை ஆதீனமும் அப்படித்தான் சொல்கிறார். ஒருவேளை 2019-ல் பிரதமர் ஆவாங்கன்னு சொல்றாங்களோ. மோடியை பிரதமர்னு சொல்றாங்களே.. அவரே பொய்யர்னு ஆகிப் போச்சே. இவங்கள நம்பி எப்படி நாட்டை ஒப்படைக்கிறது.

குஜராத்துல முஸ்லிம்களை கொன்று குவித்த மோடிக்கும் ஈழத்தில் 40 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்‌சேவுக்கும் என்னய்யா வித்தியாசம்? ராமருக்கு கோயில் கட்டு. ஒண்ணு இல்ல.. ரெண்டு இல்ல.. பத்துக் கோயில் கட்டு. ஆனா, 400 ஆண்டுகள் பழமையான மசூதியை இடிச்சுட்டுத்தான் கட்டுவேன்னு சொல்றது நியாயமா? இதுக் குத்தான் வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் எல்லாரும் ஓட்டுக் கேக்குறாங்களா?

மு.க.அழகிரியின் அண்மைக் கால நடவடிக்கைகள் கட்சியை பலவீனப் படுத்திக் கொண்டிருக்கிறதே?

அழகிரி அண்ணன் ரொம்ப நல்லவர். எனக்கு அவர் விரோதி இல்லை. தலைவர் மூளைக்காரர். அதனால்தான் தம்பி தெற்கே இருக்கட்டும் நீ வடக்கே போய் பெரிய ஆளாகி வா என்று சொல்லி அழகிரியை டெல்லிக்கு அனுப்பினார். ஆனா, அழகிரி குறுகிய வட்டத்துக்குள் சிக்கிவிட்டார். அதைவிட்டு அவர் வெளியே வரவேண்டும்.

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

25-லிருந்து 30 இடங்களில் திமுக வெற்றி பெறும். 5-லிருந்து 7 தொகுதிகள் அதிமுக-வுக்கு கிடைக்கலாம். பாஜக அணி வந்தாலும் உண்டு; வராட்டியும் இல்லை. ஏன்னா.. இப்ப டிரெண்டு மாறிக்கிட்டு இருக்கு. ஊருக்கு ஊரு அதிமுக வேட்பாளர்களை மக்கள் துரத்தியடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x