Published : 19 Sep 2018 09:45 AM
Last Updated : 19 Sep 2018 09:45 AM

இந்தி பிரச்சார சபா நூற்றாண்டு விழா டெல்லியில் குடியரசு தலைவர் தொடங்கி வைக்கிறார்

இந்தி பிரச்சார சபாவின் நூற்றாண்டு விழாவை வரும் 22-ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து தக்ஷிண பாரத இந்தி பிரச்சார சபா (மெட்ராஸ்) பொதுச் செயலாளர் எஸ்.ஜெய ராஜ், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

1918-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள கோகலே ஹாலில் அன்னி பெசன்ட் அம்மையார் தலைமையில் இந்தி பிரச்சார சபா தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் சபாவால் நடத்தப் படும் பல்வேறு தேர்வுகளில் பங்கேற்கின்றனர். தென் மாநிலங்களில் தமிழகம்தான் இந்தி கற்பவர்களில் முதலிடத்தில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத் தில் இந்தி கற்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், பிரச்சார சபா இந்த ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் வரும் 22-ம் தேதி காலை 11 மணியளவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் 700 இந்தி பிரச்சாரகர்கள், ஊழியர்கள் மற்றும் இந்தி இலக்கியவாதிகள் பங்கேற்க உள்ளனர். இதைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். முக்கிய நகரங்களில் இந்தி பிரச்சார மாநாடுகள் நடத்தப்பட உள்ளன.

தென்னிந்திய மொழிகளில் இருந்து இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட 20 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன. ‘இந்தி மொழிக்கு தென்னிந்திய எழுத்தாளர்களின் பங்கு’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, இந்தியை ஒவ்வொரு வீட்டிலும் சேர்க்கும் வகையில் வாய்மொழி தேர்வுகளை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x