Published : 03 Sep 2018 09:11 AM
Last Updated : 03 Sep 2018 09:11 AM

வீடுகள் மற்றும் தெருக்களில் சிசிடிவி கேமரா பொருத்த போலீஸார் வேண்டுகோள்

வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என காவல் துறை இணை ஆணையர் மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையின் அனைத்து பகுதிகளிலும், வரும் 31-ம் தேதிக் குள் சிசிடிவி கேமரா பொருத்த, சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தர விட்டார். இதையடுத்து, சென்னை முழுவதும் காவல் துறை சார்பில் கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு தாம்பரத்தில், குடியிருப்பு நலச்சங்கங்கள் மற்றும் போலீஸார் உதவியுடன், 54 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவற்றை, தென் சென்னை இணை ஆணையர் மகேஸ்வரி நேற்று தொடங்கி வைத்தார். இதில், பரங்கிமலை துணை ஆணையர் முத்துசாமி, தாம்பரம் உதவி ஆணையர் அசோகன், மீனம்பாக்கம் உதவி ஆணையர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது இணை ஆணையர் மகேஸ்வரி பேசியதாவது: துரைப்பாக்கம் இரட்டை கொலை வழக்கு, சுவாதி கொலை வழக்கு, செயின் பறிப்பு சம்பவங்கள் ஆகியவற்றில், குற்றவாளிகளை பிடிக்க சிசிடிவி கேமரா காட்சிகளே பெரும் உதவியாக இருந்தன. இவை, குற்றத்தை தடுக்கவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பொது மக்கள் அனைவரும் தங்களின் வீடுகள் மற்றும் தெருக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சயில், சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்த, விழிப்புணர்வு பிரசுரங்களை வீடுகள் தோறும் போலீஸார் வழங்கினர். ஆட்டோக்களிலும் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x