Published : 05 Sep 2018 04:35 PM
Last Updated : 05 Sep 2018 04:35 PM

2011 மக்கள்தொகையின் அடிப்படையில் வருவாய் பகிர்வு ஒதுக்கீடு செய்யப்பட்டால், தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும்: தேமுதிக

1971-ம் ஆண்டு  மக்கள்தொகை அடிப்படையிலேயே வருவாய் நிதி பங்கீட்டை அமல்படுத்த வேண்டுமென 15-வது நிதிக்குழுவை தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

தலைமை செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற 15-வது நிதிக்குழுவின் ஆலோசனை கூட்டத்தில், தேமுதிக சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மோகன்ராஜ், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினர். பின்னர் அதனை அறிக்கையாக தாக்கல் செய்தனர்.

அதில், “மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வருவாய் நிதி பங்கீடு பற்றி முடிவு செய்வதுதான் நிதிக்குழுவின் முக்கிய நோக்கம்.

வருவாய் பங்கீடு என்பது மக்கள்தொகை அடிப்படையில் பிரிக்கப்படுவதாகும். அரசியல் அமைப்பு சட்ட விதிகள் 55, 170 (மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி வரையறை செய்வது) விதி 330 (நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வரையறை) என்பது 1971 ஆம் ஆண்டின்மக்கள் தொகை அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டதை போலவே வருவாய் அதிகாரப் பகிர்வும் முடிவெடுக்கப்பட வேண்டும்.

தனி நபர் வருவாய் பரப்பு மற்றும் முறையான நிதி ஒதுக்கீடு அடிப்படையில் 14 ஆவது நிதிக்குழு வருவாய் பகிர்வை முடிவெடுத்தது.

15-வது நிதிக்குழு 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென்று விவரிக்கின்றது. மாநிலங்களுக்கிடையேயான 1971 மற்றும் 2011 மக்கள்தொகை அதிகப்படியான வித்தியாசங்களை தெரிவிக்கின்றது.

உதாரணத்திற்கு 1971-ல் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 4.11 கோடியாகவும், பீகார் மாநிலத்தினுடைய மக்கள் தொகை 4.11 கோடியாகவும், பீகார் மாநிலத்தினுடைய மக்கள்தொகை 4.21 கோடியாகவும் இருந்தது. 2011 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 7.21 கோடியாகவும், பீகார் 10.21 கோடியாகவும் அதிகரித்துள்ளது. அதன்படி 15-வது நிதிக்குழு நிதி அதிகாரப்பகிர்வை 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் முடிவெடுத்தால், அதிகப்படியான தவறுகள் உருவாவதற்கும், மேலும் அடிப்படை அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானதாகவும், ஒருதலைபட்சமாகவும் அமைந்துவிடும்.

2011 மக்கள் தொகை அடிப்படையில் நிதிப்பகிர்வை முடிவெடுத்தால் மத்திய அரசு வலியுறுத்திய குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்திற்காக செயலாற்றிய மாநிலங்கள் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்திற்காக செயலாற்றிய மாநிலங்கள் நிதி பயன்களை இழக்கக் கூடாது. 2011 மக்கள்தொகை அடிப்படையில் கணக்கிட்டல் அது 1971 மக்கள்தொகை கணக்கீட்டுக்கு எதிரானதாக அமைந்துவிடும். குடும்ப நல கட்டுப்பாடு திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்திய தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் பிறப்பு சதவிகிதம், உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவாக உள்ளது.

உதாரணத்திற்கு உத்தரப்பிரதேச மாநிலம் 20 சதவீதத்திற்கு அதிகமாகவும், பீகார் மாநிலம் 30 சதவீதத்திற்கு அதிகமாகவும் உள்ளபொழுது, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்கள் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

ஆகவே 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் வருவாய் பகிர்வு ஒதுக்கீடு செய்யப்பட்டால், தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதால், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடுகளை 1971 மக்கள்தொகை அடிப்படையில் 2026 ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைத்ததைப் போல , வருவாய் பகிர்வையும் 1971 மக்கள்தொகை அடிப்படையிலேயே முடிவெடுக்கப்பட வேண்டும்.

15-வது நிதிக்குழு 2011 மக்கள்தொகை அடிப்படையில் வருவாய் பங்கீட்டை அமல்படுத்தினால் தமிழ்நாட்டிற்கு வந்து சேரவேண்டிய அதிகப்படியான நிதி ஆதாரங்கள் வட மாநிலஙக்ளுக்குச் சென்றுவிடுவதால், மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிப்பது போல் ஆகிவிடும் என்று தமிழ்நாடு சார்பில் தேமுதிக குற்றம்சாட்டுகிறது.

ஏற்கெனவே 14வது நிதிக்குழுவினால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட நிதி ஒதுக்கீடு இழப்பீடு, 15-வது நிதிக்குழுவிலும் அமல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய சீரழிவு ஏற்படும் என்று தேமுதிக சுட்டிக்காட்டுகிறது.

நிதிக்குழுவானது நிதி ஒதுக்கீடு செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, திட்டங்களுக்கு முறையாக உபயோகப்படுத்தப்பட்டதா என்பதையும், எந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டதோ அந்த நிதி வேறு திட்டத்திற்காக மாற்றாமல் இருப்பதையும் நிதிக்குழு கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்று தேமுதிக கேட்டுக்கொள்கிறது.

முடிவாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி, இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கு 1971 மக்கள்தொகை எடுத்துக்கொள்ளப்படுவதைப் போல 15-வது நிதி ஒதுக்கீட்டுக்கும் 2011 மக்கள்தொகையை அடிப்படையாக வைக்காமல், 1971 மக்கள்தொகை அடிப்படையிலேயே வருவாய் நிதி பங்கீட்டை அமல்படுத்த வேண்டுமென 15-வது நிதிக்குழுவை தேமுதிக வலியுறுத்துகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x