Published : 05 Sep 2018 08:02 AM
Last Updated : 05 Sep 2018 08:02 AM

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட முயற்சி; கர்நாடகா அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க கூடாது: நடுவர் மன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி பிரதமருக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி கடிதம்

மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக் கையை பரிசீலிக்க கூடாது என்று மத்திய நீர்வள ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக மாநிலம் குடகு மலையில் தலைக்காவிரி பகுதியில் உருவாகும் காவிரி ஆற்றின் நீரில் கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு பங்குண்டு. இதனால், காவிரியின் குறுக்கே அமைக்கப்படும் எந்த தடுப்பு நடவடிக்கையும், மாநிலங் களின் அனுமதிக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

இந்நிலையில், காவிரி ஆற்றின் வழித்தடத்தில் ஒகேனக்கல்லில் இருந்து 15 கி.மீ., மேட்டூரில் இருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ள கர்நாடகத்தின் மேகேதாட்டு பகுதி யில் புதிய அணை கட்டுவதற்கு அந்த மாநில அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவெடுத்தது.

மொத்தம் 67.14 டிஎம்சி கொள் ளளவு கொண்ட இந்த அணையை அமைக்கும் முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியது. இதுதவிர, சாம் ராஜ்நகர் மாவட்டம் கொள்ளே காலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் காவிரியின் குறுக்கே சிவசமுத்திரம் மற்றும் மேகேதாட்டுவில் இரு தடுப்பணைகளை கட்டவும் முயற்சி எடுத்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா இருந்தபோது இதற்கான முயற்சி கள் தீவிரமானது. அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளால் இந்த முயற்சி தடுக்கப்பட்டு வந்தது.

மத்திய நீர்வள ஆணையம்

தற்போது கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி அரசு, மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் மீண்டும் இறங்கியுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்து, மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களை மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு தமிழகம் மீண்டும் எதிர்ப்பு தெரிவித் துள்ளது.இதுதொடர்பாக, நேற்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி எழுதியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது:

காவிரியின் குறுக்கே மேகேதாட் டுவில் ரூ.5,912 கோடி மதிப்பில், சமநிலை நீர்த்தேக்கம், குடிநீர் திட்டத் துடன் 400 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் அமைக்க கர்நாடக அரசு சாத்தியக்கூறு அறிக்கை தயாரித் துள்ளது. அந்த அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச மான இந்த நடவடிக்கையை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

காவிரியின் குறுக்கே எந்த புதிய திட்டத்தை செயல்படுத்தினாலும் அதை நதிநீரை பங்கிடும் இதர மாநிலங்களுடன் பகிர்ந்து கொண்டு அவற்றின் அனுமதியையும் பெற வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தல் களை மீறும் வகையில் கர்நாடா வின் இந்த நடவடிகைகள் அமைந் துள்ளன.

நீர் ஒழுங்கை பாதிக்கும்

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பானது சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தால் திருத்தப்பட்டதை தாங்கள் அறிவீர்கள். அதன்படி தண்ணீர் மொத்தமும் தொடர் புடைய மாநிலங்கள் தேவை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந் நிலையில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய நீர்த்தேக் கத்தை கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டிருப்பது, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாக மீறுவதாகும். இந்த நீர்த்தேக்கம் காவிரியின் இயற் கையான நீர் ஒழுங்கை பாதிக்கும். கூட்டாட்சி அமைப்பின்படி, ஆறு சார்ந்து மேல் பகுதியில் இருக்கும் எந்த ஒரு மாநிலமும் கீழ் பகுதி யில் உள்ள மாநிலங்களின் அனுமதியின்றி, தன்னிச்சையாக மாநிலங்களுக்கு இைடயிலான ஒரு ஆற்றின் இயற்கையான ஒழுங்கை தடுக்கக் கூடாது.

ஆனால், மேகேதாட்டு திட் டத்தை பொறுத்தவரை, மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாமல், மத்திய நீர்வள ஆணையத்தை நேரடியாக கர்நாடக அரசு நாடியுள்ளது. மத்திய நீர்வள ஆணையம், மேகேதாட்டு குறித்த அந்த திட்டத்தை பரிசீலிக் காமல், தமிழகம் உள்ளிட்ட இதர மாநிலங்களின் அனுமதியை பெற்று வரும்படி கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண் டும். கர்நாடகாவின் இந்த ஒரு தலைபட்சமான நடவடிக்கை, காவிரி ஆற்றை நம்பியுள்ள லட்சக்கணக்கான தமிழக விவ சாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. மேலும், தமிழக மக்கள் மத்தி யில் பயத்தை ஏற்படுத்தி யுள்ளது.

எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, மேகேதாட்டு சமநிலை நீர்த் தேக்கம் கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலிப்பதை நிறுத்தி வைக்க மத்திய நீர்வள ஆணையத்துக்கு மத்திய நீர்வள ஆதாரம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மூலம் அறிவுறுத்த வேண்டும். மேலும், தமி ழகம் மற்றும் இதர மாநிலங்களின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே எந்த திட்டத்தையும் நிறைவேற்ற கூடாது என்பதையும் தெரிவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தங்களது உடனடியான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x