Published : 19 Sep 2018 01:26 PM
Last Updated : 19 Sep 2018 01:26 PM

நான் வளரவில்லை என்றால் ஸ்டாலினும் வளரவில்லை என்றுதான் அர்த்தம்: துரைமுருகனுக்கு தமிழிசை பதில்

தமிழிசை இன்னும் குழந்தையாகவே இருக்கிறார். அவர் இன்னும் வளரவேண்டும் என்று துரைமுருகன் தெரிவித்த கருத்துக்கு ஸ்டாலினைக் குறிப்பிட்டு தமிழிசை பதிலளித்துள்ளார்.

கடந்த 16-ம் தேதி சைதாப்பேட்டையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தலைவர் தமிழிசையிடம், 'அக்கா ஒரு நிமிஷம் பெட்ரோல் விலை தினமும் உயருகிறது' என்று கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் விரட்டப்பட்டு தாக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த விவகாரம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டு கேள்வி கேட்டால் தாக்குவார்களா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் தமிழிசை குறித்து கிண்டலாக துரைமுருகன் பதிலளித்திருந்தார்.

அவரது பதிலில், ''உலகத்தில் பெரிய எலிசபெத் ராணியா தமிழிசை? யாரும் எதையும் கேட்கக்கூடாது என்று சொல்வதற்கு. இது ஜனநாயக நாடு. யாரும் எதையும் கேட்டுக்கொண்டுதான் இருப்பான். ஒருவர் கேள்வி கேட்பதே தவறு, அதற்குப் பயந்துகொண்டு அவரை அடிப்பது, அவர் மீது வழக்குபோடுவது, சிறைக்குள் தள்ளுவது என்ன நடைமுறை என்று தெரியவில்லை.

ஆகையால் தமிழிசை இன்னும் கொஞ்சம் வளர வேண்டும் அரசியலில். அவர் இன்னும் குழந்தையாகவே உள்ளார். சின்னக் குழந்தையிலிருந்து எனக்கு தமிழிசையைத் தெரியும். இன்னும் குழந்தையாகவே இருக்கிறார்'' என்று துரைமுருகன் கிண்டலடித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு தமிழிசை  இன்று  பதிலளித்துள்ளார்.

சென்னை தி.நகர் பாஜக தலைமை அலுவலகம் அமைந்துள்ள கமலாலயம் முன் ஸ்வச் பாரத்துக்காக தெருவைக்கூட்டிய தமிழிசை பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''பாஜகவின் வளர்ச்சி தமிழக அரசியல் கட்சிகளுக்கு எரிச்சலை மூட்டுகிறது. தமிழகத்திற்காக பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. கிருஷ்ணா நதியை தமிழகத்திற்குக் கொண்டு வந்துள்ளது பாஜக அரசு. மேலும் கோதாவரி நதியையும் விரைவில் கொண்டுவர முயல்வோம். காவிரிமுதல் அனைத்து நதிகளையும் தமிழகத்திற்குக் கொண்டுவந்தது பாஜக, ஆனால் அதை மறைத்து இங்குள்ளவர்கள் அரசியல் நடத்துகிறார்கள்.

ஆட்டோ ஓட்டுநர் விவகாரத்தில் பெரிய அளவில் அரசியல் செய்கிறார்கள். நான் மகாராணி போல் நடப்பதாக துரைமுருகன் கூறுகிறார். நாங்கள் அவ்வாறு நடந்தோம் என்றால் திமுக பிரியாணி கடையிலும், பியூட்டி பார்லரிலும், கேசட் கடையிலும் தாக்கியது என்ன அரசியல். அரசியல் ரீதியாக நான் வளரவில்லை என்று கூறுவது எப்படி சரியாக இருக்கும்?

நான் அவருக்கு சொல்லிக்கொள்வது நாங்கள் எல்லோருமே அரசியல்வாதிகள் பிள்ளைகளாக பிறந்து அரசியல்வாதிகளாக உயர்ந்துள்ளோம். உங்கள் கண்களுக்கு சின்னப்பிள்ளைத்தனமாக தெரியலாம். நாங்கள் வளரவில்லை என்றால் அண்ணன் ஸ்டாலினும் வளரவில்லை என்றுதான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும்.

ஏனென்றால் உங்கள் முன்னால் அரசியல் ரீதியாக வளர்ந்தவர்களை எல்லாம் வளரவில்லை என்று சொன்னால், நாங்கள் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும். ஆகவே எங்களுக்கு தேசியத் தலைவராக ஆகும் அளவுக்கு முதிர்ச்சியும் திறமையும் உள்ளது என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்''.

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x