Published : 07 Sep 2018 04:49 PM
Last Updated : 07 Sep 2018 04:49 PM

மவுனம் கலைத்தார் ஜார்ஜ்: காவல் அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

குட்கா முறைகேடு வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டிலும் சிபிஐ ரெய்டு நடந்தது. இதையடுத்து தனது மவுனத்தைக் கலைத்தார் ஜார்ஜ். பல காவல் அதிகாரிகள் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குட்கா தடைவிதிக்கப்பட்ட 2013-ம் ஆண்டில் காவல் ஆணையராக இருந்தவர் ஜார்ஜ். அவரது காலத்தில் குட்கா குடோனுக்கு அப்போதைய துணை ஆணையர் விமலா தலைமையில் போலீஸார் ரெய்டு சென்றனர். அதன் பின்னர் குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமார் வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

அதன் பின்னர் குட்கா விவகாரம் கிணற்றில் போட்ட கல்லாக மாறிப்போனது. பின்னர் வருமானவரித்துறை ரெய்டுக்குப் பின் மாதவ்ராவ் டைரி சிக்கியபோது பலரின் பெயர் அந்த டைரியில் இருந்தது. அதில் காவல் ஆணையர் ஜார்ஜ் பெயரும் இருந்தது. ஆனாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படவில்லை.

ஜார்ஜ் மீண்டும் காவல் ஆணையரானார். இதனிடையே குட்கா விவகாரம் பெரிதானதை அடுத்து ஜார்ஜ் முறைகேடு குறித்து அதிகாரிகள் சிலர் பெயரைக் குறிப்பிட்டு தலைமைச் செயலாளருக்கு எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவர் ஓய்வுபெற்றார்.

இதனிடையே வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சிபிஐ நேற்று முன்தினம் ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தியது.

இதுகுறித்து ஜார்ஜ் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று தனது மவுனம் கலைத்தார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் ஜார்ஜ் கூறியதாவது:

''நீதிமன்றக் கருத்து ஒன்றை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு சில பாதுகாப்பு நடைமுறைகளை அது அளித்துள்ளது. குட்கா விவகாரம் விசாரணையில் இருப்பதால் அதுப்பற்றி நான் கூற விரும்பவில்லை.

நான் இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் நீதிமன்றத்தில் அளித்த புகாரில் என் மதிப்பைக் குலைக்கும் வகையில் மனு அளித்திருந்தார். பணம் அளிக்கப்பட்ட காலகட்டத்தில் 21-4-2016, 20-5-2016, 20-6-2016 நான் பணம் பெற்றதாகக் குறிப்பிட்டிருப்பது தவறு.

அந்த நேரங்களில் நான் காவல் ஆணையராக இருந்ததில்லை. நான் 2016-ம் ஆண்டு 9 செப். அன்று தான் காவல் ஆணையரானேன். அதற்கு முந்தைய காலகட்டத்தில் தான் இது நடந்துள்ளது. அந்த நேரத்தில் நான் காவல் ஆணையராக இல்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன். அந்த நேரத்தில் காவல் ஆணையராக இருந்தவர்கள் பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை.

ஆனால், அதன் பின்னர் திமுக வழக்கறிஞர் வில்சன் மனுவில் எனது பெயரை நீக்கிவிட்டார். அவர் அந்த நேரத்தில் இருந்த காவல் ஆணையர் என்று குறிப்பிட்டுள்ளார். எப்.ஐ.ஆரில் குறிப்பிட்ட தேதிகளிலும் நான் காவல் ஆணையராக இருந்ததில்லை. இருக்கின்ற உண்மைகளின் அடிப்படையிலேயே இதைக் கூறுகிறேன்.

நான் பதவியேற்ற காலத்தில் சமூக வலைதளங்களில் இதுகுறித்த யூகங்கள், வதந்திகள் வெளியாகின. அதன் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்க வேண்டி கடிதம் எழுதினேன்.

இதுகுறித்து தகவல் அறிந்த நான், அந்த நேரத்தில் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையராக இருந்த விமலாவை அழைத்துக் கேட்டேன். காரணம் அவர் இந்த விவகாரம் நடந்த அந்த நேரத்தில் மாதாவரம் துணை ஆணையராக இருந்ததால் கேட்டேன். இவ்வளவு விவகாரம் நடந்துள்ளது ஏன் உங்களுக்கு இது தெரியவில்லை என்று கேட்டேன்.

அவர் எனக்குத் தெரியாது என்று தெரிவித்தார். நான் நுண்ணறிவுப் பிரிவில் 28-12-2015 அன்றுதான் பணியில் இணைந்தேன். அதற்கு முன்னர் மாதாவரத்தில் இருந்தேன். எனக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில். மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் தீர்த்தக்கரையான்பட்டு என்ற இடத்தில் ஏசி புழல் மன்னர் மன்னன், தலைமையில் ரெய்டு நடத்தினர். அப்போது வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் ஜெயக்குமார் அங்கு சென்றார். அங்கு அவர் நடத்திய சோதனையில் புகையிலைப்பொருட்கள் இல்லை என்று அறிக்கை அளித்தார். சில பொருட்கள், சிறிய எந்திரங்கள் இருந்தது, குட்கா இல்லை என்றார்.

அதன் பிறகு உயர் அலுவலர்கள் உத்தரவின் பேரில் சிவகுமார் புட்சேப்டி ஆஃபிஸர் அங்கு சென்றபோது தடை செய்யப்பட்ட மசாலா இருக்கிறதா என ஆய்வு செய்யச் சென்றார். எதுவுமில்லை என்பதால் நடவடிக்கையைக் கைவிட்டதாக தெரிவித்துள்ளனர் என்று விமலா தெரிவித்தார்.

அங்கு சென்ற ஒரு அலுவலர்? யார் யார் குட்கா தயாரிக்கப்பட்ட அந்த இடத்துக்கு சென்றார்கள். குட்கா குடோனை ஆய்வு செய்த ஒரு அலுவலர், 4 ஆய்வாளர்கள் அடங்கிய குழு குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமாரிடம் தெரிவித்தனர். அவர் இந்த விவகாரத்தை விட்டுவிடுங்கள் என்று தெரிவித்து, அங்கு சென்று அங்குள்ள ஆய்வாளர்களுக்கு அங்கிருந்து வெளியேறுங்கள் என்று கூறிவிட்டார். இதுதான் விமலா அளித்த ரிப்போர்ட்.

விமலா அளித்த அறிக்கையின்படி அந்த நேரத்தில் பணியாற்றிய அதிகாரிகள் காவல் ஆணையர், கூடுதல் ஆணையர் முதல் ஆய்வாளர்கள் வரை யார் யாருக்கு ரிப்போர்ட் அளித்தார் என்று  நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. உண்மை வெளிவர வேண்டும் அவ்வளவுதான்.

அந்தக் காலகட்டத்தில் அனைத்து கூடுதல் ஆணையர்கள் தாமரைக்கண்ணன், ஆபாஷ்குமார், ரவிகுமார், கருணாசாகர், சேஷ சாயி, ஸ்ரீதர், செந்தமரைக்கண்ணன், ஸ்ரீதர், இணை ஆணையர்கள் ராஜேந்திரன், தினகரன், ஜோஷி நிர்மல் குமார், துணை ஆணையர்கள் லட்சுமி, புகழேந்தி, ராமகிருஷணன், விமலா, ராஜேந்திரன் மற்றும் இந்தக் காலகட்டத்தில் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன், திரிபாதி, ஷுக்லா ஆகியோர் காவல் ஆணையர்களாக இருந்தனர்.

அதன் பின்னர் நான் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் நல்லசிவத்திடம், ஏன் ஜெயக்குமார் அங்கு சென்றது குறித்து நீங்கள் என்னிடம் ஏன் அறிக்கை அளிக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு நல்லசிவம் இதுகுறித்து ஜெயக்குமார் என்னிடம் அறிக்கையே அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

நான் இணை ஆணையர் நுண்ணறிவுப் பிரிவு வரதராஜுவை அழைத்து இதுகுறித்து கேட்டபோது அவர் எனக்குத் தெரியவே தெரியாது என்று தெரிவித்தார். மேற்கண்ட அனைத்து விவகாரங்களும் நான் அந்த சமயத்தில் திரட்டியது. துணை ஆணையர் விமலா இந்த விவகாரங்கள் அனைத்தையும் அவரது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டதாகக் கூறினார்.

என்னுடைய கேள்வி என்னவென்றால் நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையர் வரதராஜு ஏன் உளவுத்தகவலை அளிக்கவில்லை, நான் இது குறித்து எனக்கு முன் பணியில் இருந்த காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரனிடம் விமலா அறிக்கை அளித்தாரா என கேட்டபோது அவர் அளிக்கவில்லை என்றார்.

அப்படியானால் விமலா எந்த மேலதிகாரிகளிடம் புகார் அளித்தார். மேலதிகாரிகளுக்கு இது தெரியுமா? சென்னையில் சுமார் 300 காவல் நிலையங்கள் உள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் காவல் ஆணையர் அனுமதியின்பேரில் மட்டும்தான் நடக்குமா? இது சாத்தியமா?

காவல் ஆணையருக்குக் கீழ் பல அடுக்குகளில் பல அதிகாரிகள் உள்ளனர். பல காலகட்டங்களில், பல அதிகாரிகள் இருந்த காலகட்டத்தில் இது நடந்துள்ளது. அவர்களுக்கு இது தெரியுமா? அல்லது தெரியாதா?

மூத்த அதிகாரியாக எனது பணியை சிறப்பாகச் செய்து பாராட்டும் பெற்றுள்ளேன். அனைவரிடமும் குடும்பம் போன்று தான் பழகினேன். கடினமான இலக்குகளை நான் செய்து முடித்துள்ளேன். தற்போது அளவுக்கு அதிகமான வலி என் இதயத்தில் உள்ளது.

துணை ஆணையர் ஜெயக்குமார், அவர் ஆணையர் அலுவலகத்தில் அமர்ந்திருப்பதை மட்டுமே தொழிலாக செய்தார். மிக மோசமான பணி அதிகாரியாக இருந்தார். ஒரு அதிகாரி மத்திய குற்றப்பிரிவின் ரவுடிகள் கண்காணிப்பு, ஓசிஐயூ பிரிவில் இருந்துள்ளார். அவர் அமலாக்கப் பிரிவு ஏடிசியாக இருந்து செயல்பட்டுள்ளார்.

அவரது சிறப்பான பணியைப் பார்த்துதான் அவருக்குச் சில பணிகளை அளித்தேன். அவருக்கு சட்டவிரோதச் செயல்பாடுகள் அங்கு நடந்து வருகிறது என்பது அவருக்கு தெரிந்திருந்தது. மூத்த அதிகாரிகள் ஆணையை மதிக்கும் எந்தப் பணியையும் அவர் செய்யவில்லை. காவல்துறையின் மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்பட்டார்.

இதுபோன்ற மிகப்பெரிய சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தபோது அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இது குறித்து அவரது பணி மதிப்பீடு அறிக்கையில் எதிர்மறையான அறிக்கையே நான் அளித்தேன். அவரது நேர்மை சந்தேகத்துக்குரியது.

சில வார இதழ்களில் என் மதிப்பைக் குலைக்கும் வகையில் எழுதினார்கள், வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. வார இதழ்களில் என்னைப் பற்றி எழுதினார்கள். நான் அதைப்பற்றி விரிவாகப் பேச விரும்பவில்லை. புதிய டிஜிபி தேர்வாவதற்கு மூன்று நாட்களுக்கு முன் ஜூன் 27 2017- என்னைப் பற்றிய தவறான எனது நன்மதிப்பைக் குலைக்கும் வகையில் இவற்றை அளித்தனர்.

மீடியாக்களுக்கு நான் சொல்வது, ரெய்டு குறித்து சில மீடியாக்கள் தவறான தகவல்களை அளித்தீர்கள். ரெய்டு நடந்தபோது நான் வீட்டிலேயே இல்லை என்கின்றனர். நான் வீட்டில்தான் இருந்தேன். எனது நன்மதிப்பைக் குலைக்கும் வகையில் இதுபோன்ற தவறான தகவல்களைப் பதிவு செய்வதால் ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான என்னைப் பற்றிய தகவல்கள் இளம் அதிகாரிகளுக்கு என்ன உபயோகமான தகவலை அளிக்கப் போகிறது.

மேலும் எனது வீட்டிலிருந்து ஏராளமான ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தவறாகக் கூறியுள்ளனர். 1994-ல் கொடுக்கப்பட்ட வீட்டுவசதி குடியிருப்பு சேல்டீட், கார் இன்ஷுரன்ஸ் மட்டுமே என்னிடம் உள்ளது''.

இவ்வாறு ஜார்ஜ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x