Published : 09 Sep 2014 12:46 PM
Last Updated : 09 Sep 2014 12:46 PM

உள்ளாட்சி இடைத்தேர்தல்: ஜெ.-க்கு விஜயகாந்த் சரமாரி கேள்வி

மக்களவைத் தேர்தலில் ஆளும் வர்க்கத்தின் அதிகார துஷ்பிரயோகமும், முறைகேடுகளும் இருந்தன என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏற்கெனவே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களில் ஏற்பட்ட மோதல் காரணமாக பழிக்குப் பழி வாங்கும் போக்கு இன்னும் முடிந்தபாடில்லை. ஆனால் இவற்றையும் மிஞ்சும் வண்ணம் ஆளும் வர்க்கத்தினர் நடைபெறுகின்ற உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் ஆடுகின்ற ஆட்டம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் போட்டியிட கூடாது என்ற எண்ணம் ஆளும் வர்க்கத்திற்கு இருக்குமேயானால் எதற்காக தேர்தலை நடத்த வேண்டும்?

ஆளும் வர்க்கத்தை சார்ந்தவர்களையே மாநகராட்சி மேயராகவும், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவராகவும், வார்டு உறுப்பினராகவும் நியமனம் செய்து கொள்ளலாமே? இல்லை என்றால் ஆளும் வர்க்கத்தினரை தவிர வேறுயாரும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிட கூடாது என்று சர்வாதிகார ஆட்சியாளரைபோல் அறிவித்து இருக்கலாமே? இது தானாக வந்த தேர்தல் அல்ல ஆளும் வர்க்கத்தினரால் திணிக்கப்பட்ட தேர்தல் என்பதை ஒட்டு மொத்த தமிழக மக்களும் நன்கு அறிவர்.

வேட்பு மனு தாக்கலின் போது தடுப்பதும், குண்டர்களை கொண்டு விரட்டி அடிப்பதும், வேட்பு மனுக்களை கிழித்து எறிவதும், வாங்க மறுப்பதும், வேட்பு மனு தாக்கல் செய்த இடங்களில் அதிகாரிகளின் துணை உடன் எவ்வித காரணமுமின்றி வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்வதும், அதன்மூலம் ஆளும்வர்க்கத்தினரை வெற்றி பெற்றதாக அறிவிப்பதும், அதையும் மீறி வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியவற்றின் வேட்பாளர்களை கடத்துவதும், நிர்பந்தப்படுத்துவதும், மிரட்டுவதும் மற்றும் வேட்புமனுவை திரும்பப்பெறச் செய்வதுமென ஆளும் வர்க்கத்தின் அத்துமீறல்களும், முறைகேடுகளும், அளவுகடந்துபோய் மிகப்பெரிய ஜனநாயக படுகொலையை நடத்தியுள்ளனர்.

இந்த ஜனநாயக படுகொலைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் எதிர்கட்சிகள் பல இடங்களில் முற்றுகை போராட்டம், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

ஆளும் வர்க்கத்திற்கு துணைபோகும் விதமாக, மாநில தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மற்ற அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை கூறி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கிறது.

இதுபோலத்தான் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் வர்க்கத்தின் அதிகார துஷ்பிரயோகமும், முறைகேடுகளும் இருந்தன என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இந்த உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல, ஆளும்கட்சியின் அத்துமீறல்களுக்கு தமிழகமக்கள் இதையே சான்றாக எடுத்துக்கொண்டுள்ளனர்.

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ளவர்களில் ஒரு பாதிபேர் அதாவது பதினாறு அமைச்சர்கள் முகாமிட்டு ஒருமேயர் தேர்தலுக்கு பணியாற்றுகிறார்கள் என்ற செய்தி வந்துள்ளது. ஒருஅமைச்சரின் முழுபலத்தை கொண்டு தேர்தலை சந்தித்தாலே சமாளிக்க முடியாது பதினாறு அமைச்சர்கள் ஒரே இடத்தில் இருக்கும் போது அதிகார துஷ்பிரயோகத்திற்கும், அத்துமீறல்களுக்கும், முறைகேடுகளுக்கும், வன்முறைகளுக்கும் அளவே இருக்காது என்பதை நான் சொல்ல தேவையில்லை தமிழக மக்களுக்கே நன்றாகத்தெரியும்.

ஆளும் வர்க்கத்தின் இந்த ஏதேச்சதிகாரமான போக்கை கட்டுப்படுத்த, முறைகேடுகளை முறியடிக்க, அராஜகங்களை தட்டிகேட்க, தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் எவ்வித பாகுபாடும் பார்க்காமல் ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும்.

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்" என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ தமிழகத்தில் எதிர்கட்சிகளே இல்லை, எதிர் அணிகளே இல்லை என்றல்லாம் இறுமாப்புடன் கூறிவரும் அவருக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறேன்.

"ஆளும் கட்சியினர் தனக்கு எதிராக எதிர் தரப்பினர் எவரும் இல்லை என்ற மனப்பான்மை கொண்டுவிட்டால் ஜனநாயக நோக்கம் சீரழிந்து போய்விடும்" என்று அண்ணா சொல்லியுள்ளார். அவர் பெயரை கட்சிக்கும், அவர் முகத்தை கொடிக்கும் பயன்படுத்தும் அஇஅதிமுக வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அண்ணா சொன்னதையும் உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x