Published : 26 Sep 2018 12:33 PM
Last Updated : 26 Sep 2018 12:33 PM

டிடிவி தினகரனுக்கு துணிவிருந்தால் புதுக்கோட்டையில் போட்டியிட தயாரா?- அமைச்சர் விஜயபாஸ்கர் சவால்

டிடிவி தினகரனுக்கு நெஞ்சிலே துணிவிருந்தால் புதுக்கோட்டை சட்டமன்ற தேர்தலில் நான் நிற்கும் தொகுதியில் என்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா? என்று சுகாதாராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விடுத்தார்.

அதிமுகவில் ஓபிஎஸ் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தர்மயுத்தம் நடத்தினார். அப்போது வேறு முதல்வரை தேர்வு செய்யும் கட்டாயத்தில் கூவத்தூரில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்க வைக்கப்பட்டனர்.

சசிகலா தலைமையில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். டிடிவி தினகரனை துணைப்பொதுச் செயலாளராக நியமித்து சசிகலா சிறைச் சென்றார். அதன்பின்னர் மத்திய அரசுடன் அதிமுக நெருக்கமாக ஓபிஎஸ் ஈபிஎஸ் இணைப்பு நடந்தது.

தான் யார் சொல்லி அதிமுகவுடன் இணைந்தேன் என்பதை ஓபிஎஸ் பின்னர் போட்டுடைத்தார். ஓபிஎஸ் ஈபிஎஸ் இணைப்பு நடந்த நேரத்தில் டிடிவி தினகரன் ஒதுக்கப்பட்டார். அதன்பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பல முனைப்போட்டியில் ஆளுங்கட்சி அதிமுகவை தோற்கடித்து பெரிய அளவிலான வெற்றியை தினகரன் பெற்றார்.

அதன் பின்னர் டிடிவி தினகரன் திரும்பி பார்க்கவைக்கப்பட்டார். அவரை தங்கள் பரம எதிரியாக அதிமுக அமைச்சர்கள் கருதி பேசத்துவங்கினர். தினகரனை அவர்கள் விமர்சிப்பதை தினகரனும் பதிலுக்கு விமர்சிக்க துவங்கினார். இதனால் கடும் கோபத்தில் உள்ள அதிமுக அமைச்சர்கள் அவருக்கு சவால் விடும் வகையில் பேசி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், திருவாரூர் இடைத்தேர்தலில் நாங்களே வெல்வோம் என டிடிவி தினகரன் பேசுவதும், அத்தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்வதும் அமைச்சர்களுக்கு கடும் கோபத்தை கிளப்பியுள்ளது. திமுக காங்கிரஸை கண்டித்து கூட்டம் போட்டு அதில் அமைச்சர்களில் பெரும்பாலானோர் டிடிவியை திட்டித்தீர்த்தனர். டிடிவிக்கு கூடும் கூட்டத்தை பார்த்து நானும் புதுக்கோட்டையில் லட்சம் பேர் கூட்டத்தை கூட்டுகிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விட்டார்.

புதுக்கோட்டையில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் தினகரனை கடுமையாக விமர்சித்தார். “ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர் டிடிவி. தினகரனுக்கு நெஞ்சிலே துணிவிருந்தால் இதே புதுக்கோட்டை தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் நிற்கட்டும் நான் எதிர்த்து நிற்கிறேன் என்று தெரிவித்தார்.

நெஞ்சிலே வஞ்சத்தை வைத்து, வார்த்தைகளில் விஷத்தை கக்கியிருக்கிறார் டிடிவி தினகரன். அவர் சசிகலாவின் விசுவாசி அல்ல சசிகலா புஷ்பாவின் விசுவாசி. ஜெயலலிதாவால் 10 ஆண்டுகள் ஓரங்கட்டப்பட்டு பதுங்கு குழியில் இருந்தவர் டிடிவி, குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க முயல்கிறார்.

அதிமுகவை எதிர்ப்பபவர்கள் திமுகவாக இருந்தாலும், டிடிவியாக இருந்தாலும் நெல்லிக்காய் மூட்டைப்போல் சிதறி ஓடுவார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x