Last Updated : 08 Sep, 2018 09:11 AM

 

Published : 08 Sep 2018 09:11 AM
Last Updated : 08 Sep 2018 09:11 AM

கோயில்கள் பெயரில் இ-சேவை கட்டணம் வசூலிக்கும் தனியார் இணையதளங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை: ஆலய நிர்வாகங்களுக்கு அறநிலையத் துறை உத்தரவு

கோயில்களில் பூஜை, பரிகாரம் செய்வதாக இ-சேவை கட்டணம் வசூலிக்கும் தனியார் இணைய தளங்கள் மீது குற்றவியல் நட வடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகங்களுக்கு இந்து சமய அற நிலையத் துறை உத்தரவிட்டுள் ளது.

தமிழக இந்து சமய அறநிலை யத் துறையின் கட்டுப்பாட்டில் 38,646 கோயில்கள் உள்ளன. இவற்றில் மதுரை மீனாட்சி அம்மன், திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் அதிக மான பிரசித்தி பெற்ற தலங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல் கின்றனர்.

கோயில்களில் அபிஷேகம், தங்கரதம், தங்கத் தொட்டில், இ-உண்டியல், இ-நன்கொடை ஆகிய சேவைகளைப் பெற, உலகின் எந்த பகுதியில் இருந்தும் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளும் வசதி சில ஆண்டு களாக நடைமுறையில் உள்ளது. தனியார் நிறுவனத்திடம் மென் பொருளைப் பெற்று, இந்த இணை யதள சேவைகளை அறநிலையத் துறை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், தனியார் இணையதளங்கள் மூலம் இ-சேவையில் முறைகேடு நடப்ப தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை யடுத்து, அறநிலையத் துறை மூலம் இ-சேவை கட்டணங்களைப் பெறும் தனியார் இணையதளங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், பல தனியார் இணைய தளங்கள் இ-சேவை வழங்குவதாக விளம்பரம் வெளியிட்டு, பக்தர் களை ஏமாற்றி வந்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, இ-பூஜை உள்ளிட்ட இ-சேவைகள் அனைத் தையும் அந்தந்த கோயில்களின் இணையதளங்கள் மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று அறநிலையத் துறை அறி வித்துள்ளது.

கோயில்களுக்கு சம்பந்தம் இல்லாத நிறுவனங்களால் இ-சேவைகளுக்கு கட்டணம் முன்பதிவு செய்யப்படுவது தெரிய வந்தால் காவல்துறைக்கு புகார் தெரிவித்து, குற்றவியல் நட வடிக்கை எடுக்குமாறும் கோயில் நிர்வாகங்களுக்கு அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

‘‘சில தனியார் நிறுவனங்கள் இ-சேவை இணையதளங்களை உருவாக்கி அவற்றின் மூலம், முக்கிய கோயில்களில் சிறப்பு பூஜைகள், பரிகாரங்கள் செய்து தருவதாக விளம்பரங்கள் செய் கின்றனர். இணையதளம் வாயி லாக கட்டணங்களைப் பெற்று பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில், கோயில்களில் விழிப்புணர்வு விளம்பரங்கள் வைக்க கோயில் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. கோயில்களுக்கு சம் பந்தம் இல்லாத நிறுவனங்களால் இ- சேவைகளுக்கான கட்டணம் முன்பதிவு செய்யப்படுவது தெரிய வந்தால் காவல்துறைக்கு புகார் தெரிவித்து குற்றவியல் நட வடிக்கை எடுக்கவும் கோயில் நிர் வாகங்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

எனவே, பக்தர்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள், பரிகாரங்கள் செய்ய விரும்பி னால், சம்பந்தப்பட்ட கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக வோ, கோயிலுக்கு நேரில் சென்றோ, உரிய கட்டணத்தைச் செலுத்தி, ரசீதுகளைப் பெற்றுக் கொள்ளலாம். தனியார் இணைய தளங்களை நம்பி ஏமாற வேண் டாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x