Published : 09 Sep 2018 08:14 AM
Last Updated : 09 Sep 2018 08:14 AM

மாற்று டிரைவர் வராததைக் கண்டித்து சரக்கு ரயிலை பாதி வழியில் நிறுத்திய ஓட்டுநர்: கேட்டை கடக்க முடியாமல் 11 மணி நேரம் மக்கள் அவதி

பணி முடிந்துவிட்டதால் மாற்று ஓட்டுநர் வராததைக் கண்டித்து, சரக்கு ரயிலை நடு வழியிலேயே நிறுத்திவிட்டு ஓட்டுநர் சென்றுவிட்டதால் கும்பகோணத்தில் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் 11 மணி நேரம் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் 41 சரக்கு ரயில் வேகன்களில் பொள்ளாச்சிக்கு கொண்டு செல்வதற்காக நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டன. நெல் மூட்டைகள் ஏற்றும் பணி நிறைவு பெற்றவுடன் நேற்று அதிகாலை 3 மணிக்கு சரக்கு ரயிலின் ஓட்டுநர் ரயிலை இயக்கத் தொடங்கினார்.

கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து சிறிது தூரம்வரை ரயிலை இயக்கிய அவர், மாதுளம்பேட்டை ரயில்வே கேட்டை கடந்தவுடன் ரயில் இஞ்ஜினை நிறுத்தினார். பின்னர், அங்கிருந்து உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு, "எனக்கு பணி நேரம் முடிந்து விட்டது. இன்னும் மாற்று ஓட்டுநர் வரவில்லை. நான் எனது பணி நேரத்தை விட இதுவரை கூடுதலாக வேலை செய்துவிட்டேன். எனவே, ரயில் இஞ்ஜினை இயக்க மாற்று ஓட்டுநரை அனுப்புங்கள்" என்று கூறினார்.

அதற்கு, "நீங்கள் தஞ்சாவூர் வரை ரயிலை இயக்கிச் செல்லுங்கள். அங்கு மாற்று டிரைவர் வந்துவிடுவார். அதன்பின்னர் பணியை மாற்றிக்கொள்ளலாம்" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிகாரிகளின் பதிலை ஏற்காத ரயில் டிரைவர் அங்கேயே சரக்கு ரயிலை நிறுத்திவிட்டு கீழே இறங்கிச் சென்று விட்டார்.

நேற்று அதிகாலை 3 மணிக்கு ரயில் நிறுத்தப்பட்டது முதல் மாதுளம்பேட்டை ரயில்வே கேட்டை திறக்க முடியாமல் போனது. இவ்வாறு 11 மணி நேரம் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து கும்பகோணம் ரயில் நிலைய மேலாளர் கூறியபோது, "கும்பகோணத்தில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக 41 வேகன்களில் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டன. ரயிலை இயக்கிய ஓட்டுநர் பணி முடிந்துவிட்டதாக கூறி பாதி வழியில் ரயிலை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். இதுகுறித்து திருச்சி கோட்ட அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து மதியம் 2 மணிக்கு மாற்று டிரைவர் வந்து சரக்கு ரயிலை இயக்கிச் சென்றார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x