Published : 29 Sep 2018 06:42 PM
Last Updated : 29 Sep 2018 06:42 PM

சிறைக் கைதிகளிடம் சாதியப் பாகுபாடு காட்டப்படுகிறதா?- மாநில மனித உரிமை ஆணையம் சிறைத்துறை ஏடிஜிபிக்கு நோட்டீஸ்

பாளையங்கோட்டை சிறையில் சாதியப் பிரிவுகளின் அடிப்படையில் கைதிகள் நடத்தப்படுவதாக வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் சாதி ரீதியாக பிரிக்கப்பட்டு தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டு இருப்பதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் செய்தி வெளியானது. மேலும் அந்தச் செய்தியில், சிறையில் கைதிகளை அவரவர் சாதிப் பெயரைச் சொல்லி அழைப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.

இந்தச் செய்தியை சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி டி.ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து (சுமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர், சிறையில் கைதிகள் சாதி ரீதியாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி அறையில் அடைக்கப்படுவது மனித உரிமை மீறல் ஆகாதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாகவும், சாதியின் பெயரைச் சொல்லி கைதிகளை அழைப்பது தொடர்பாக கைதிகள் தரப்பிலோ அல்லது பொதுமக்கள் தரப்பிலோ புகார் மனுக்கள் ஏதேனும் வந்துள்ளதா?, இதுபோன்று சாதிப் பெயரைச் சொல்லி அழைக்கும் நடைமுறையை தடுத்து நிறுத்த ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கண்ட கேள்விகளுக்கு சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஷுதோஷ் சுக்லா, பாளையங்கோட்டை சிறை சூப்பிரண்டு ஆகியோர் 4 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x