Published : 15 Sep 2018 12:03 PM
Last Updated : 15 Sep 2018 12:03 PM

பாஜக-அதிமுக ஆட்சியை வீழ்த்த திமுக தலைமையில் அணி சேர்வோம்: மதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் தீர்மானம்

திமுகவின் தலைமையில், தோழமைக் கட்சிகளுடன் அணி சேர்ந்து, மதிமுக தனது அரசியல் கடமைகளை மேற்கொள்ளும் என மதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா - வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, மதிமுக சார்பாக இன்று (சனிக்கிழமை) முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது.

இதில், மத்திய பாஜக அரசு மற்றும் அதன் கைப்பாவையாக இயங்கி வருகின்ற அதிமுக அரசு இரண்டையும் வீழ்த்துவதற்கு திமுகவின் தலைமையில், தோழமைக் கட்சிகளுடன் அணி சேர்ந்து, மதிமுக தனது அரசியல் கடமைகளை மேற்கொள்ளும் என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

இதுதவிர, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்தி, இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்குத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், பொதுவாழ்வில் பொன்விழா கண்ட வைகோவுக்கு பாராட்டு தீர்மானம், தமிழ் ஈழம் அமைவதற்குப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிட வேண்டிய சட்டப் பொறுப்பை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவதற்கு எக்காரணம் கொண்டும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது, அணைப் பாதுகாப்பு மசோதாவைத் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கக்கூடாது என்பது உட்பட பலவேறு சுற்றுச்சூழல் கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 35 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இதுதவிர, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x