Published : 24 Sep 2018 11:03 AM
Last Updated : 24 Sep 2018 11:03 AM

பாலியல் துன்புறுத்தல்களைத் தடுத்திடுக; பன்னாட்டு ஆலைகளை கட்டுப்படுத்துக: மார்க்சிஸ்ட் மாநிலக் குழுவின் 5 தீர்மானங்கள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த சிபிஐ விசாரணையை உடனே துவங்கிட வேண்டும் என்பது உட்பட 5 தீர்மானங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், மத்தியக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமையில், செப்டம்பர் 22-24 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய (திங்கள்கிழமை) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் - 1

அதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுத்திடுக

* நிர்மலா தேவி மீதான வழக்கில் உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் சிபிஐ புலன் விசாரணை செய்ய வேண்டும், குற்றமிழைத்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

* தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (டி.வி.ஏ.சி.) ஐ.ஜி. முருகன் மீது ஒரு பெண் எஸ்.பி., பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் அதிகாரியாக முருகன் இருக்கிறார் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசும், காவல்துறையும் தயக்கம் காட்டுகிறதா என்கிற வலுவான ஐயம் எழுகிறது. உடனடியாக, ஐ.ஜி. முருகனை இடை நீக்கம் செய்து முறையாக விசாரணையை நடத்த வேண்டும்.

* திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மாணவியை ஒரு பேராசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்த பிரச்சினையில் கல்லூரி நிர்வாகம் அதை மூடி மறைக்கவே முயற்சிக்கிறது. உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்து தொடர் நடவடிக்கைக்குப் போக வேண்டும். மாணவியை மீண்டும் விடுதியிலும், கல்லூரியிலும் அனுமதிக்க வேண்டும்.

* கோவை, எஸ்.என்.எஸ். கல்லூரி தாளாளர் தம் அலுவலகத்தில் பணிபுரியும் இளம் பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்த காட்சி வலைதளங்களில் பரவியிருக்கிறது. இந்த விவகாரத்தில் மாவட்ட காவல்துறை ஆணையர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சிவகங்கையில் அண்மையில் ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய பொது விசாரணையில் எடுத்துக் கொள்ளப்பட்ட பல வழக்குகளில் காவல்துறை உரிய நேரத்தில், உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே வெளிவந்துள்ளது. சட்டப்படி செயல்படாத காவல்துறையினர் மீது இபிகோ 166 ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தீர்மானம் - 2

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த சிபிஐ விசாரணையை உடனே தொடங்கிடுக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் தொடர்ந்த வழக்கில், துப்பாக்கி சூடு மற்றும் இதர விஷயங்கள் குறித்த காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மீதான புகார்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் 14.08.2018 அன்று நீதிபதிகள் பஷீர் அகமது, சி.டி.செல்வம் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

தீர்ப்பு கிடைத்த தேதியிலிருந்து 4 மாத காலத்துக்குள் இவை செய்யப்பட வேண்டும், சிபிஐ இதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்பதும் தீர்ப்பின் அம்சம். காவல்துறை நிலையாணை 703ஐ மாற்றி அமைக்க டிஜிபி ஒரு குழு போட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொலை தொடர்புகளைத் தற்காலிகமாக அரசு துண்டித்ததைப் பொறுத்தவரையில், ஐநா சபையின் கருத்து சுதந்திரம் குறித்த பரிந்துரைகளின் அடிப்படையில் பரிசீலித்துப் பாதுகாக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சிக்கு கிடைத்த ஒரு வெற்றி.

தவறிழைத்த காவல்துறை மற்றும் நிர்வாகத்தினர் மீது புகார் பதிவு செய்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான். இப்புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து புலன் விசாரணையை சிபிஐ உடனடியாகத் தொடங்க வேண்டும். தமிழக அரசு, அனைத்து கோப்புகளையும் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.

தீர்மானம் - 3

ஜனநாயக விரோத, சட்ட விரோத செயல்களைச் செய்யும் பன்னாட்டு ஆலைகளை கட்டுப்படுத்துக; தொழிலாளர் உரிமைகளைக் காத்திடுக

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களில் உருவாகும் வேலைவாய்ப்புகள் நிரந்தரமானதாக, சங்கம் வைக்கும் உரிமை, கூட்டுப்பேர உரிமைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கார், மோட்டார் பைக் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள் ஆலைகளைச் செயல்படுத்தி வருகிறது. 20 முதல் 50 சதவிகிதம் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பையும், மற்றவர்களுக்கு கான்ட்ராக்ட் அடிப்படையிலும் வேலைவாய்ப்பு உள்ளது. சங்கம் வைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. அடிப்படையான இந்த உரிமைகள் மறுக்கப்படுவது மிகப்பெரிய ஜனநாயக உரிமைப் பறிப்பு ஆகும்.

யமஹா ஜப்பான் நாட்டு நிறுவனம், இங்கு பணிபுரியும் 800-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களிடையே, தொழிற்சங்கம் வைத்ததற்காக, 2 நிர்வாகிகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி சட்டவிரோதமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் 3 நாட்களாக உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். அதே போல எம்.எஸ்.ஐ. என்ற கொரிய நிறுவனத்தில் 17 நாட்களாக வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.

நிரந்தரத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து ஆலைக்குள் பயிற்சி, கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுவதால், விபத்துகள் நடைபெறுவது அதிகரித்துள்ளது. இதைத் தடுத்து, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தாமல், பன்னாட்டு நிறுவனங்களின் அராஜகப்போக்கை ஆதரிப்பதாக உள்ளது.

எனவே, மேற்கண்ட பிரச்சினைகளில் தமிழகஅரசு உடனடியாக தலையீடு செய்து, சம்பள உயர்வு உள்ளிட்ட அடிப்படைக் கோரிக்கைகளைத் தீர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், டாங்சன், ஹனிவேல், கனிஷ்க் கோல்டு போன்ற ஆலைகள் சட்டவிரோதமாக மூடப்பட்டுள்ளது. இதன் தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வேலை கேட்டுப் போராடி வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளிலும் தமிழக அரசு நேர்மையாக தலையீடு செய்து, மீண்டும் ஆலையைத் திறந்து, போராடும் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் - 4

ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஒப்பந்தம் செய்வதை தடுத்து நிறுத்துக

இந்தியாவில் 55 மண்டலகங்களில் புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதில் பெரும்பாலான மண்டலங்களில் வேதாந்தா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் மரக்காணம் முதல் கடலூர் வரை, பரங்கிப்பேட்டை முதல் வேளாங்கண்ணி வரை, குள்ளஞ்சாவடி முதல் வைத்தீஸ்வரன் கோயில் வரை என மூன்று மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.

மத்திய பாஜக அரசு பெட்ரோலியப் பொருட்கள் எடுப்பதற்கான அனுமதி கொள்கையை மாற்றியுள்ளது. தனியாரை அனுமதிப்பது மட்டுமல்லாமல் ஒரு பொருளை எடுக்க அனுமதி பெற்று எது கிடைக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளலாம் என்று மாற்றியுள்ள சூழ்நிலையில், மீத்தேன், ஷேல் கேஸ் உட்பட எடுக்கப்படும் ஆபத்து உள்ளது. இதனால் நில வளம், நீர் வளம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், உணவு உற்பத்தியில் கடும் பற்றாக்குறை ஏற்படும். கோடிக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எனவே, காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதுடன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு செப்டம்பர் 24-ம் தேதி மத்திய அரசு ஒப்பந்தம் செய்ய உள்ளது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இந்த ஒப்பந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.

தீர்மானம் - 5

மேலணையிலிருந்து தண்ணீர் வீணாகுவதை தடுக்க நவீன தொழில்நுட்பம் மூலம் தற்காலிக அணை அமைத்திடுக

திருச்சி முக்கொம்பு மேலணை உடைந்தது காவிரி டெல்டா பாசனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அணை பராமரிப்பில் அதிகாரிகளின் அலட்சியமும், மணல் கொள்ளையுமே அணை உடைப்புக்கு அடிப்படை காரணமாகும்.

ஏறத்தாழ 25 டிஎம்சி தண்ணீர் வீணாகிப் போயுள்ளது. ஆனால் தமிழக அரசு இது குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. தண்ணீர் வீணாகப் போவதைத் தடுக்கும் வகையில் ராணுவத்தைப் பயன்படுத்தி தற்காலிகமான வலுமிக்க அணையை அமைப்பதற்கு பதிலாக, மணல் மூட்டை, பாறங்கற்கள் என்று பழைய முறையில் தமிழக அரசு செயல்படுவது சரியல்ல.

புதிதாக வலுமிக்க அணையை கட்டுவதற்கான பணியைத் தொடங்கும் அதே நேரத்தில், உடைப்பைச் சரி செய்ய, இந்திய ராணுவத்தைப் பயன்படுத்தி நவீன தொழில்நுட்பம் மூலம் தண்ணீர் வீணாகாத வகையில் தற்காலிக அணையை அமைத்திட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x