Published : 17 Sep 2018 03:33 PM
Last Updated : 17 Sep 2018 03:33 PM

இந்து மதத்தைக் காக்க வந்தவரைப் போல ஹெச்.ராஜா பேசுகிறார்: தினகரன் கிண்டல்

ஹெச்.ராஜா மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (திங்கள்கிழமை) டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நீதிமன்றம் குறித்த ஹெச்.ராஜாவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தினகரன், “ஹெச்.ராஜா மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார். இந்து மதத்தைக் காக்க வந்த கிருஷ்ணர் மாதிரி பேசுவது தவறு. இந்தியாவிலுள்ள இந்துக்கள் மற்ற மதத்தினரை மதிப்பவர்கள். மற்றவர்களைத் துன்புறுத்தியோ இழிவுபடுத்தியோ பேசுவது தவறு. இந்து மதம் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும். நான் ஒரு இந்து. ஆனால், மற்ற மதத்தினரைத் தாக்கிப் பேசினால் நான் உண்மையான இந்து கிடையாது.

உயர் நீதிமன்றத்தைத் தரக்குறைவாகப் பேசுகிறார். இப்படிப்பட்ட மனநிலையில் உள்ளவர், மதத்தைக் காப்பாற்றுகிறேன் எனச் சொல்வது சுயநலத்தின் வெளிப்பாடு. தான் சார்ந்திருக்கும் அமைப்பை தமிழகத்தில் வளர்க்க வேண்டும் என்ற விரக்தியில் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார். ஏற்கெனவே நோட்டாவுடன் போட்டிப்போட்டுக் கொண்டிருப்பவர்கள் இன்னும் பாதாளத்திற்குத் தான் செல்வார்கள். மதவெறியைத் தூண்டுபவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை.

தமிழக அரசு அடிமை அரசாங்கம். மடியில் கனம் இருப்பதால் அவர்கள் பேச மாட்டார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். நீதிமன்றத்திற்குப் பயந்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்திருக்கிறது. டிஜிபி மீதே குட்கா வழக்கில் புகார் உள்ளது. அமைச்சர்கள் மீது ஊழல் புகார் உள்ளது” என தினகரன் தெரிவித்தார்.

அப்போது, சமீப காலமாக தமிழக அமைச்சர்கள் மத்திய அரசை விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “தம்பிதுரை மத்திய அரசை விமர்சிக்கிறார். அவரை முதல்வராக்கவில்லையென்ற கோபம் வெகுநாட்களாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் பொதுச் செயலாளர் சசிகலா மீதே கோபித்துக் கொண்டார். இந்த ஆட்சி கலைவதற்காக இப்படிப் பேசி வருகிறார்” என தினகரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x