Published : 08 Jun 2019 11:53 AM
Last Updated : 08 Jun 2019 11:53 AM

அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை: மதுரை வடக்கு எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா வலியுறுத்தல்; திடீர் போர்க்கொடியால் கட்சிக்குள் சலசலப்பு

அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை வேண்டாம் ஒரே ஒரு தலைமைதான் தேவை என மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா தீடீரென போர்க்கொடியை உயர்த்தியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜன் செல்லப்பா, "அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை. பொதுக்குழுவை உடனே கூட்ட வேண்டும். அதிமுகவில் ஓபிஎஸ். ஈபிஎஸ் அணிகள் இன்னும் ஜெயலலிதாவுக்கு இருந்த ஆளுமைத் திறன் இப்போது கட்சிக்குள் யாருக்குமே இல்லை. அதனால், பொதுக்குழுவை உடனே கூட்ட வேண்டும். கட்சிக்கு இரண்டு தலைமைகள் தேவையில்லை. அதிகாரமிக்கவர் தலைமைக்கு வர வேண்டும்.

கட்சிக்குள் இரண்டு அணிகளும் முழுமையாக இணையவில்லை என்ற நெருடலைத் தவிர்க்க வேண்டும். ஒரே தலைமை இருந்திருந்து அதிமுக கட்டுப்பாட்டுடன் செயல்பட்டிருந்தால் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கும்.

இந்தத் தேர்தலுக்குப் பின் டிடிவி தினகரன் என்ற மாயை மறைந்துவிட்டது. இப்போது இருப்பதெல்லாம் அதிமுக - திமுக என்ற இரண்டு கட்சிகள் மட்டுமே.

எனவே இந்த சூழலில் சரியான நேரத்தில் உரிய முடிவை எடுக்கும் உரிய அதிகாரம் படைத்த தலைமையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற இயலும்.

பொதுக்குழுவில் ஒரே தலைமை என்ற கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தப்போகிறோம். அப்போது தேவைப்பட்டால் அந்த ஒரே தலைமை யார் என்பதை வெளிப்படையாகச் சொல்லவும் தயாராக இருக்கிறேன். அதற்காக என் மீது கட்டம் கட்டப்பட்டாலும் அதை சந்திக்கவும் தயாராகவே இருக்கிறேன். கட்சியிலிருந்து என்னை நீக்கினாலும் சரி. ஒரே ஒரு தலைமை தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

எம்ஜிஆர் இருந்தபோது, ஜெயலலிதா இருந்தபோது சந்தித்ததுபோல் அதிமுக வெற்றிகளைக் குவிக்க வேண்டும். திமுக என்னதான் முயன்றாலும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை இழுத்த ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. ஆனால், சின்ன சின்ன நெருடல்கள் அதிமுகவை வீழ்த்திவிடுமோ என்ற அச்சம் உள்ளது.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவரை கட்சியின் பொதுச் செயலாளராக பொதுக்குழுவை கூட்டி தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார் மட்டுமே ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். ஆனால், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 பேர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லவில்லை. அவர்கள் ஏன் செல்லவில்லை? அவர்களை தடுத்தது யார்?. இத்தகைய நெருடல்கள் நீக்கப்பட வேண்டும்" எனக் கூறினார்.

ராஜன் செல்லப்பா சொன்ன குட்டிக் கதை:

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோதே ராஜன் செல்லப்பா ஒரு குட்டிக் கதை சொன்னார்.

ஒருமுறை ராமர் குளிக்கச் செல்லும்போது அவரது வில்லையும் அம்பையும் கங்கை நதித் கரையில் வைத்தார். அம்பை படுக்க வைக்கக்கூடாது என்ற மரபினால் அதனை மணலில் குத்தி வைத்துவிட்டுச் சென்றார். திரும்பிவந்து பார்க்கும் போது அந்த அம்பில் ஒரு தேரைக்குஞ்சு சிக்கியிருந்தது. தேரைக்குஞ்சிடம் ராமர், நீ முதலிலேயே சொல்லியிருக்கலாம் அல்லவா? என்று வினவியுள்ளார். அதற்கு அந்தத் தேரை எனக்கு எந்தக் கஷ்டம் வந்தாலும் ராமா.. ராமா என்றே சொல்வேன். ஆனால், இப்போது துன்பமே ராமரால் வந்திருக்கிறது. அப்போது என்ன சொல்வேன்? என்று பதிலுக்குக் கேட்டிருக்கிறது. அப்படித்தான் தலைமையினாலேயே நாங்கள் நொந்து போயிருக்கிறோம் என்றார்.

தோல்வியைச் சந்தித்த ராஜ் சத்யன்..

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் அதிமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால், அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனிடம் தோல்வியுற்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே ராஜ் சத்யனை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒதுக்கியதாக சலசலப்புகள் எழுந்தன. ராஜ் சத்யனை ஆதரித்து முதல்வர் மதுரையில் இருமுறை பிரச்சாரம் செய்தார். இப்படியான புகைச்சல் காரணமாகவே ராஜன் செல்லப்பா ஒற்றைத் தலைமை கோரிக்கையை முன்வைப்பதாக அதிமுக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ராஜன் செல்லப்பா மறைமுகமாக ஆதரிப்பது எடப்பாடி பழனிசாமியைத்தான் என அவருக்கு நெருங்கிய வட்டாரமும் தெரிவிக்கின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x