Last Updated : 27 Jun, 2019 05:36 PM

 

Published : 27 Jun 2019 05:36 PM
Last Updated : 27 Jun 2019 05:36 PM

தங்கதமிழ்ச்செல்வனை சேர்க்கக் கூடாது; தேனி மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம்: முதல்வர், துணை முதல்வரை சந்திக்கவும் முடிவு

23ஆண்டுகளாக அதிமுகவசம் இருந்த ஆண்டிபட்டி தொகுதி திமுகவசம் செல்லக் காரணமாக இருந்தவர் தங்கதமிழ்ச்செல்வன். எனவே அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்று தேனி மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேனி மாவட்டம் அதிமுகவின் நம்பிக்கைக்குரிய தொகுதிகளை உள்ளடக்கியதாக இருந்து வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வென்றதால் ஆண்டிபட்டி தொகுதி கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவசமே இருந்தது.

இதே போல் பெரியகுளம், போடி, கம்பம் உள்ளிட்ட தொகுதிகளும் அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த நான்கு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் அமமுக தனி அணியாக உருவெடுத்தது. இந்த மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கதமிழ்ச்செல்வன், கதிர்காமு ஆகியோர் தகுதியிழப்பு செய்யப்பட்டனர். இதற்காக இடைத்தேர்தல் கடந்த மே மாதம் நடைபெற்றது.

இதில் தங்கதமிழ்ச்செல்வன் தனது செல்வாக்கையும், ஜாதிய ஓட்டுக்களையும் ஒருங்கிணைந்து வாக்கு சேகரித்தார். அதிமுக. இரண்டு அணியாக களம் இறங்கியதால் ஓட்டுக்களும் பிரியத் துவங்கியது.

இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெறாமல் இந்ததொகுதிகள் திமுகவசம் சென்று விட்டது. இதனால் 23 ஆண்டுகளாக தொகுதி அதிமுகவை விட்டுச் செல்லும் நிலை உருவானது.

ஜெயலலிதா இருந்தபோது மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த தொகுதிகைளையும் கையில் வைத்திருந்த நிலைமாறி தற்போது சரிபாதி திமுகவசம் சென்று விட்டது.

இது அதிமுக.தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தங்கதமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு இணைய விரும்புவதாக வரும் தகவல் இவர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து தேனியில் இன்று (வியாழக்கிழமை) மதுரை ரோட்டில் உள்ள ஒரு இடத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் சையதுகான் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் தொண்டர்கள் பலரும் தங்கள் ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.

வேறு கட்சிக்குச் சென்றதுகூட தவறில்லை. ஆனால் அரசியலில் தன்னை வளர்த்த அதிமுகவிற்கு தங்கதமிழ்ச்செல்வன் பெரும் வடுவை ஏற்படுத்தி விட்டார். அதிமுகவிற்கு ஓட்டுப்போடக்கூடாது, அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று செயல்பட்டவர்.

இதனால் இந்த தேர்தலில் ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகள் அதிமுகவில் இருந்து திமுகவசம் சென்று விட்டது. தொகுதியை எதிர்க்கட்சிக்குத் தாரை வார்த்துவிட்டு தற்போது அதிமுகவில் இணைவதை எப்படி ஏற்றுக் கொள்வது என்ற பலரும் எதிர்ப்புக்குரல் கொடுத்துள்ளனர்.

மேலும் தங்கதமிழ்ச்செல்வனை அதிமுகவில் சேர்க்கக் கூடாது என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த தீர்மானத்தை  முதல்வர், துணைமுதல்வரிடம் கொடுத்து இது குறித்து வலியுறுத்த இருக்கிறோம் என்றும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x