Published : 01 Sep 2014 10:00 AM
Last Updated : 01 Sep 2014 10:00 AM

இளையோருக்கு முதியோர் வழிவிடுவதுதான் மரபு: மூத்த தலைவர்கள் நீக்கம் குறித்து வெங்கைய்ய நாயுடு கருத்து

பாஜக ஆட்சிமன்றக் குழுவில் இருந்து வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூத்தத் தலைவர்கள் நீக்கப் பட்டுள்ளதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, இளையோருக்கு முதியோர் வழிவிடுவதுதான் இந்திய மரபு என்றார்.

கோவை, நீலம்பூர் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கட்டிடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, நாடாளுமன்ற அலுவலர்கள், நகர அபிவிருத்தி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை முடிவு செய்வது குறித்து மத்திய அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதே. எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

வழக்கமாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது. தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் சபாநாயகர்தான் முடிவு செய்ய வேண்டும். இப்பிரச்சினை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் கருத்து சொல்வது சரியாக இருக்காது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதை மத்திய அரசு எவ்வாறு கட்டுப்படுத்த போகிறது?

விலையேற்றம் தற்போது ஏற்பட்டதல்ல, ஏற்கெனவே இருப்பதுதான். ஆனால், அசாதாரண நிலை இல்லை. பொருளாதாரத்தை வலுப்படுத்தாமல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது. பாஜக ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள்தான் ஆகிறது. கடந்த 10 ஆண்டுகால மோசமான ஆட்சியே இப் பிரச்சினைகளுக்கு காரணம். நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அனைத்துத் தரப்பிலும் தெளிவான பார்வையுடன் முடிவுகளை எடுத்து வருகிறது.

பாஜக ஆட்சிமன்றக் குழுவில் இருந்து வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூத்தத் தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு ஒருதரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதே?

வாஜ்பாய் உடல்நலம் நன்றாக இல்லை. அதேசமயம், எந்த ஒரு நிர்வாகத்திலும் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இளையோருக்கு மூத்தோர் வழிவிடுவதுதான் இந்திய மரபு. அதன் அடிப்படையில்தான் அவர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் நாங்கள் அனைவரும் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோரின் தயாரிப்புகள்தான்; அவர்கள் வகுத்த பாதையில்தான் செல்ல உள்ளோம்.

மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மறைமுகமாக கூட்டணி அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறதே?

இது திமுக-வும், அதிமுக-வும் ஒன்றாக சேர்வதற்கு சமம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x