Last Updated : 11 Jun, 2019 03:56 PM

 

Published : 11 Jun 2019 03:56 PM
Last Updated : 11 Jun 2019 03:56 PM

தேனி அருகே பரபரப்பு: ஒரு கொலையை விசாரித்த போது இன்னொரு கொலைக்கான குற்றவாளிகள் பிடிபட்டனர்

தேனி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த கூலித்தொழிலாளி கொலை செய்து புதைக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்தது. இதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.  உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்தவர்கள் மனோஜ்குமார் (23), அஜித்குமார் (24), பிரவின்குமார் (23). மூவரும் விவசாயக் கூலித்தொழிலாளர்கள். பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள்.

இந்நிலையில் கடந்த 2018 ஜன.13 முதல் மனோஜ்குமாரைக் காணவில்லை. இதுகுறித்து கூடலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இது ஒருபுறம் இருக்க, கடந்த ஏப்ரலில் சுருளி அருவியில் உள்ள பூதநாராயண கோயிலில் உண்டியல் பணத்தைத் திருட வந்த மர்மநபர்கள் பூசாரி பாண்டியை கோயில் வளாகத்திலே கொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை எந்தக் குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அஜித்குமார், பிரவின்குமார் ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். இதில் பூசாரி கொலை வழக்கில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினர். போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தவே வேறு ஒரு கொலை செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அதிர்ந்து போன போலீஸார் மேலும் விசாரித்தனர். அப்போது நண்பன் மனோஜ்குமாரை கொலை செய்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கையில், காணாமல் போன மனோஜ்குமார், அஜித்குமாரின் வளர்ப்பு நாயை விஷம் வைத்துக் கொன்றுள்ளார். இதுகுறித்து முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி மூவரும் கருநாயக்கன்பட்டி முத்தன்பட்டி அருகே கிளித்தோப்பிற்குச் சென்றுள்ளனர். மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அஜித்குமார் தான் வைத்திருந்த வேல்கம்பினால் மனோஜ்குமாரை குத்திக் கொலை செய்துள்ளார். பின்பு இருவரும் அங்கேயே உடலைப் புதைத்து விட்டு வந்துவிட்டனர். வேறு கொலை குறித்து விசாரிக்கையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது என்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வட்டாட்சியர் சத்யபாமா தலைமையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சதை எதுவும் இல்லாமல் எலும்புக்கூடாக உடல் இருந்தது. எனவே அந்த இடத்திலேயே தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.ஒரு கொலையை விசாரிக்கப் போய் இன்னொரு கொலைக்கான குற்றவாளிகள் பிடிபட்டது போலீஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூடலூர் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x